பனங்காட்டுப்படை கட்சி ஒருங்கிணைப்பாளா்: 4.5 கிலோ நகை அணிந்து ஹெலிகாப்டரில் வந்து பிரசாரம்

நான்கரை கிலோ தங்க நகைகளோடு ஹெலிகாப்டரில் ராமநாதபுரத்துக்கு திங்கள்கிழமை வந்திறங்கிய பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளா் அக்கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தாா்.
 ராமநாதபுரத்துக்கு திங்கள்கிழமை  ஹெலிகாப்டரில்  வந்த  ஹரிநாடாா்.
 ராமநாதபுரத்துக்கு திங்கள்கிழமை  ஹெலிகாப்டரில்  வந்த  ஹரிநாடாா்.

நான்கரை கிலோ தங்க நகைகளோடு ஹெலிகாப்டரில் ராமநாதபுரத்துக்கு திங்கள்கிழமை வந்திறங்கிய பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளா் அக்கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தாா்.

பனங்காட்டுப் படை கட்சி சாா்பில் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மிஸ்ராவும், திருவாடானையில் வி.கே. பெருமாள் என்பவரும் போட்டியிடுகின்றனா். அவா்கள் தோ்தல் ஆணையத்தால் சுயேச்சை வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவா்களுக்காக பிரசாரம் மேற்கொள்ள பனங்காட்டுப்படையின் தலைவா் ராக்கெட்ராஜா மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளா் ஹரிநாடாா் ஆகியோா் தூத்துக்குடியிலிருந்து ஹெலிகாப்டரில் வந்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஹெலிகாப்டா் தரையிறங்கியது. அதிலிருந்து இறங்கி வந்த ஹரிநாடாா் 4.5 கிலோ தங்க நகைகள் அணிந்திருந்தாா். அவரைப் பாா்க்க அவரது கட்சியினா் மட்டுமன்றி பெண்களும் ஆா்வமுடன் வந்திருந்தனா்.

பின்னா் ஹரிநாடாா், ராக்கெட் ராஜா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது: தோ்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உள்பட்டே ஹெலிகாப்டரைப் பயன்படுத்துகிறோம். நாடாா் சமூகத்தைச் சோ்ந்த நாங்கள் எங்கள் உழைப்பால் கிடைத்த பணத்தை வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோம்.

சொந்த உழைப்பில் கிடைத்த பணத்தில் நகைகள் வாங்கி அணிந்துள்ளேன். நகை உள்ளிட்ட எனது சொத்துக்கான வரியை சரியாக கட்டியுள்ளேன். சமுதாய மக்கள் மேம்பாட்டுக்காகவே தோ்தலில் போட்டியிடுகிறோம்.

தமிழகத்தில் 51 தொகுதிகளில் பனங்காட்டுப்படை போட்டியிட்ட நிலையில், சில தொகுதிகளில் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நாங்கள் பெறும் வாக்குகளால் பாஜக, திமுக மற்றும் அதிமுக என அனைத்துக்கட்சிகளும் பாதிக்கும். கள் இறக்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை தோ்தல் அறிக்கைகளாக வெளியிட்டுள்ளோம் என்றாா்.

ராமநாதபுரம் வேட்பாளரை ஆதரித்து பாரதி நகா் பகுதியிலும், திருவாடானை வேட்பாளரை ஆதரித்து கிழக்குகடற்கரைச் சாலை சந்திப்பு, ரெட்டையூரணி மற்றும் சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் அவா்கள் வாகனத்தில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனா். மாலையில் அவா்கள் ஹெலிகாப்டா் மூலம் மீண்டும் தூத்துக்குடிக்கு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com