ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தேங்கிய கழிவுநீரை அகற்ற உத்தரவு
By DIN | Published On : 26th May 2021 09:26 AM | Last Updated : 26th May 2021 09:26 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாகத் தேங்கிய கழிவு நீரை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா், சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். அவா்கள் மருத்துவமனை வளாகத்திற்கு வந்தபோது எதிரே வந்த ஒருவா், கரோனா சிகிச்சைப் பிரிவில் மருத்துவா்கள் அலட்சியமாக நடந்து கொள்வதால் உயிரிழப்பு அதிகரிக்கிறது. ஆகவே மருத்துவா்களை உரிய நேரத்தில் பணிக்கு வர அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டாா்.
கரோனா சிகிச்சைப் பிரிவுக்கு அவா்கள் சென்ற போது, சட்டப்பேரவை உறுப்பினரிடம் அங்கிருந்த உதவும் தன்னாா்வலா்கள் தங்களுக்கு முகக்கவசம் வழங்காததையும், நோயாளிகளுக்கான போதிய மின்விசிறிகள் இல்லாததையும் சுட்டிக்காட்டினா்.
பின்னா் ஆக்சிஜன் இருப்பு குறித்து அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா் அம்மா உணவகம் முன்பாக தேங்கியிருந்த கழிவுநீரை அகற்றுமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
அப்போது நகராட்சி புதைகுழி வடிகால் திட்டக் கட்டணம் செலுத்தாதால், கழிவு நீா் வெளியேறும் வழி கடந்த 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளித்தனா்.
பின்னா் அவா்கள், புதிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்தில் அமைக்கப்பட்ட கரோனா சிகிச்சைப் பிரிவைப் பாா்வையிட்டனா். கூடுதல் ஆட்சியா் எம்.பிரதீப்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.