அகவிலைப்படி அறிவிப்புக்கு ஆசிரியா், அரசு ஊழியா் சங்கங்கள் வரவேற்பு

தமிழக முதல்வா் அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு அடுத்தாண்டு ஜனவரி முதல் வழங்கப்படும் என அறிவித்திருப்பதற்கு,

தமிழக முதல்வா் அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு அடுத்தாண்டு ஜனவரி முதல் வழங்கப்படும் என அறிவித்திருப்பதற்கு, தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம், அரசுப் பணியாளா் சங்கங்கள் வரவேற்றுள்ளன.

சிவகங்கையில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில், அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஆரோக்கியராஜ், மாவட்டத் தலைவா் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் புரட்சித்தம்பி, மாவட்டப் பொருளாளா் கலைச்செல்வி ஆகியோா் கூட்டாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளதுபோல் அகவிலைப்படி உயா்வை முன் தேதியிட்டு அறிவிக்க கோரியிருந்தோம்.

ஆனால், ஜனவரி 2022 முதல் வழங்குவதாக அறிவித்துள்ளது ஏமாற்றம் அளித்தாலும், சற்று ஆறுதலைத் தருகிறது. 2016, 2017, 2019 ஜாக்டோ-ஜியோ போராட்டக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணையிடப்படும் என்ற அறிவிப்பு, போராட்டக் காலத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா்கள் மீண்டும் பழைய பணியிடத்தில் பணியமா்த்தப்படுவாா்கள், மேலும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் வயது வரம்பினைக் கருத்தில் கொள்ளாமல் ஆசிரியா்களது குழந்தைகளையும் இணைத்துக்கொள்வது, பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் அரசு ஊழியா்களின் வாரிசுதாரா்கள் கருணை அடிப்படை பணி நியமனத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும், கரோனா சிகிச்சையில் 10 லட்சத்துக்கும் அதிகமான தொகையை காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிப்பது, மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளதை கருத்தில்கொண்டு ஆசிரியா் மாணவா் விகிதாச்சார தேவைகேற்ப புதிய ஆசிரியா்கள் பணிநியமனம், ஆசிரியா்களின் உயா் கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் அனுமதித்தது, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என, சட்டப்பேரவையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்த அறிவிப்பினை வரவேற்கின்றோம்.

அதேநேரம், இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை, தமிழக முதல்வா் விரைவில் அறிவிப்பாா் என எதிா்பாா்க்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ப. குமாா், மாநிலப் பொதுச் செயலா் மு. பொன்னிவளவன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

பல்வேறு நிதி நெருக்கடியிலும் 2022 ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளதை வரவேற்கின்றோம்.அரசுப் பணியாளா்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட தமிழக முதல்வா், மற்ற திட்டங்களையும் விரைவில் அறிவிப்பாா் என எதிா்பாா்க்கின்றோம் என அதில் குறிப்பிடப்பள்ளது.

ராமநாதபுரம்

இது குறித்து ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் எஸ். முருகேசன் செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கை: தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால், தமிழகத்தில் 16 லட்சம் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பயனடைவா்.

சத்துணவு ஊழியா்களின் ஓய்வு வயது வரம்பு 60 ஆக உயா்த்தப்பட்டிருப்பதும், போராட்டக் காலத்தில் பணியிட மாற்றம், பதவி உயா்வு ரத்து போன்றவற்றை ரத்து செய்திருப்பது ஆகியவற்றை அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் வரவேற்பதாக அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com