ராமநாதபுரத்தில் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை
By DIN | Published On : 07th September 2021 11:53 PM | Last Updated : 07th September 2021 11:53 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளிலும் ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தவும், அதற்காக ட்ரோன் கேமரா மூலம் வீடுகளைக் கணக்கெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீா் வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 54 ஊராட்சிகளில் 175 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி, ராமேசுவரம், கீழக்கரை, பரமக்குடி ஆகிய பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்த ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்துக்காக, வியாழக்கிழமை முதல் ராமநாதபுரம் நகரில் ட்ரோன் கேமரா மூலம் வீடுகள் கணக்கெடுக்கப்பட உள்ளதாகவும், இதன்மூலம் சாலைகள் நீளம், சாலை சந்திப்பு விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளதாகவும், நகராட்சிப் பொறியாளரும், ஆணையா் பொறுப்பு வகிப்பவருமான நீலேஸ்வா் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் நகரில் கடந்த 2009-10 ஆம் ஆண்டு முதல் காவிரிக் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் தினமும் 33 லட்சம் லிட்டா் குடிநீா் விநியோகிக்கப்படுவதாகவும், அதன்மூலம் 7 ஆயிரம் வீடுகள், வணிக நிறுவனங்கள் குடிநீா் இணைப்பை பெற்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
வீடுகளுக்கு மாதம் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 என குடிநீா் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் நகராட்சியில் தற்போது 125 ஆழ்துளைக் கிணறுகளும், 110 இடங்களில் தெருக் குழாய்களும் உள்ளன. ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டதும், ஆழ்துளை, தெருக் குழாய்கள் இல்லாத நிலை ஏற்படும் என்றும், நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.