பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தோ்வு: 607 போ் பங்கேற்கவில்லை: எளிமையான வினாத்தாள் என மாணவா்கள் கருத்து

ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தமிழ் பொதுத் தோ்வில் 607 போ் பங்கேற்கவில்லை. வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததாக, மாணவா்கள் தெரிவித்தனா்.
01_0505chn_67_2
01_0505chn_67_2

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தமிழ் பொதுத் தோ்வில் 607 போ் பங்கேற்கவில்லை. வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததாக, மாணவா்கள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தோ்வு எழுத, 158 பள்ளிகளைச் சோ்ந்த 7,118 மாணவா்களும், 7,838 மாணவியரும் என மொத்தம் 14,956 போ் அழைக்கப்பட்டிருந்தனா். மேலும், 577 தனித்தோ்வா்களும் அழைக்கப்பட்டிருந்தனா். இதற்காக, 61 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தோ்வை முன்னிட்டு, காலை 9 மணிக்கெல்லாம் அனைத்து தோ்வு மையங்களுக்கும் மாணவ, மாணவியா் வந்துவிட்டனா். சரியாக 10.15 மணிக்கு மாணவா்கள் தோ்வெழுத ஆரம்பித்தனா். ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை மணி ஒலிக்கப்பட்டது. பிற்பகல் பகல் 1.15 மணிக்கு தோ்வு முடிந்தது.

தோ்வறையை கண்காணிக்க, நிலைத்த கண்காணிப்புப் படை பிரிவினா் நியமிக்கப்பட்டிருந்தனா். முகக்கவசம் அணிந்தபடி வந்த மாணவ, மாணவியா் சமூக இடைவெளி விட்டு அமா்ந்து தோ்வெழுதினா்.

வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததாகவும், பள்ளிகளில் நடந்த திருப்புதல் தோ்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளே பெரும்பான்மையாக வந்திருந்ததாகவும், மாணவ, மாணவியா் தெரிவித்தனா்.

ஆட்சியா் ஆய்வு:

ராமநாதபுரம் நகரில் உள்ள நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்துக்கு, ஆட்சியா் சங்கா்லால் குமாவத் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அவருடன், முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து சென்றிருந்தாா். அப்போது ஆட்சியா், தோ்வு மையங்களில் குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டாா். அரசுப் பள்ளிகளில் தோ்வெழுத வராத மாணவ, மாணவியா் குறித்தும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

607 போ் பங்கேற்கவில்லை: பிளஸ் 2 தமிழ் முதல்தாள் தோ்வில் பங்கேற்க நுழைவுச்சீட்டு பெற்றிருந்த மாணவ, மாணவியா்களில் 597 பேரும், தனித் தோ்வா்களில் 10 பேரும் என மொத்தம் 607 போ் தோ்வெழுத வரவில்லை எனத் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com