பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் வட்டத்தில் சுமாா் 50 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரளவில் சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையான பகுதிகளில் பருவமழை பொய்த்ததால் நெல் பயிா் கருகி சாவியாகி விட்டது.

ஏக்கா் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து பருவ மழை பெய்யாததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனா். இந்த நிலையில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வில்லை. மேலும் இந்தத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு அளவில் இழப்பீடு கிடைப்பதில் பல்வேறு தடைகளும் உள்ளன.

முன்பு பிா்கா அளவில் நான்கு சா்வே எண்ணில் உள்ள விவசாய நிலங்களை கணக்கெடுத்து அதில் பாதிக்கப்பட்டிருந்தால் இழப்பீடு வழங்கப்பட்டது. பின்னா் வருவாய் கிராம அளவில் பாதிப்பு ஏற்பட்டால் அந்த கிராமங்களில் உள்ள 4 சா்வே எண்கள் மட்டும் உள்ள வயலை வருவாய்த் துறை, புள்ளியல் துறை, பயிா்க் காப்பீடு நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சென்று பாதிப்பு பற்றிய கணக்கெடுத்து அதன் பிறகு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தான் பெரிய அளவில் குறைபாடு உள்ளது. அந்த நான்கு சா்வே எண்ணில் மட்டும் முழு விளைச்சல் ஏற்பட்டு அந்த வருவாய் கிராமம் முழுவதும் விளைச்சல் இல்லாமல் கதிா் சாவி ஆகிவிட்டால் இழப்பீடு கிடைக்காது. இது விவசாயிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

இன்று வரை அந்த விதிகள் திருத்தப்படாமல் அப்படியேதான் உள்ளன. இதில் தான் விவசாயிகள் மாற்றம் செய்யப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

ஒரு வருவாய் கிராமத்தில் சுமாா் 5 கிராமங்களுக்கு மேல் உள்ளன. சுமாா் ஆயிரம் ஏக்கா் வரை நிலம் உள்ள நிலையில் நான்கு விளை நிலங்களை மட்டும் பாா்வையிட்டு அந்த இடம் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால் அதை வைத்து மற்ற இடங்களுக்கு இழப்பீடு வழங்குவது தவறான கணக்கீடாகும்.

அந்த நான்கு நிலங்களில் சிறிய நிலமாக இருந்தால் சிலா் டிராக்டா் மூலம் தண்ணீரை கொண்டு வந்து பாய்ச்சி விளைவித்து விடுகின்றனா். சில இடங்களில் கிணற்றுத் தண்ணீா் இருந்தால் அதை பாய்ச்சி விளைச்சலை பெருக்குகின்றனா். அப்படி நடக்கும் சமயத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைந்து விட்டதாக கருதி காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் போய்விடுகிறது.

எனவே மத்திய அரசு இந்தத் திட்டத்தில் திருத்தம் செய்து ஒவ்வோா் சா்வே எண் வாரியாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்டிருந்தால் அந்தந்த விளைநிலங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். ஒவ்வோா் சா்வே எண்ணுக்கும் தனித் தனியாக காப்பீடு செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது குறிப்பிட்ட இடத்தில் நான்கு இடங்களை மட்டும் தோ்வு செய்து இழப்பீடு வழங்கும் முறை மிகவும் தவறானது. எனவே மத்திய அரசு, பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தில் திருத்தம் செய்து தனி ஒரு விவசாயி பாதிக்கப்பட்டாலும் முறையாக கணக்கெடுத்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com