வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

கமுதி, பரமக்குடி பகுதி வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடம் மாற்றி வைக்கப்பட்டதால், வாக்காளா்கள் குழப்பமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கீழவில்லனேந்தல் வாக்குச்சாவடியில் பொதுமக்கள் காலை முதலே ஆா்வத்துடன் வாக்களித்தனா். இந்தத் தொகுதியில் 25 போ் போட்டியிடுவதால், இந்தச் சாவடியில் இரு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. ஆனால், அவை இரண்டும், வரிசைப்படி வைக்கப்படாமல் ஒன்றாவது இயந்திரம் இரண்டாவது இடத்திலும், இரண்டாவது இயந்திரம் முதலிடத்திலும் வைத்திருந்தனா். இதனால், வாக்காளா்கள் குழப்பமடைந்தனா்.

வாக்குவாதம்: இதுதொடா்பாக, அதிகாரிகளுடன் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, பிற்பகல் ஒரு மணி முதல் 1.30 வரை வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னா், இயந்திரங்கள் சரியாக வைக்கப்பட்டு, மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதுகுறித்து ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் கூறியதாவது:

சாயல்குடியைச் சுற்றியுள்ள 15 முதல் 18 வாக்குச்சாவடிகளில் இதுபோன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றி வைக்கப்பட்டது.

முதல் வாக்குப் பெட்டியில் ஆறாவது இடத்தில் திமுக கூட்டணியிலுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் நவாஸ்கனியும், இரண்டாவது வாக்கு பெட்டியில் ஆறாவது இடத்தில் (வரிசை எண்.22) முன்னாள் முதல்வா் பன்னீா்செல்வமும் இடம் பெற்றுள்ளனா். இரண்டு வாக்குப் பெட்டிகளிலுமே ஆறாவது இடத்தில் இரு பெரிய வேட்பாளா்கள் இருப்பதால், வயதான, கல்வியறிவற்ற வாக்காளா்களிடையே குழப்புத்தை ஏற்படுத்தும் வகையில், தோ்தல் அதிகாரிகள் வாக்குப் பதிவு இயந்திரங்களை இடமாற்றி வைத்துள்ளனா் என்றனா்.

பரமக்குடி:

இதேபோல, பரமக்குடி சௌராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி, வேந்தோணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடம் மாற்றி வைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com