இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

கமுதி அருகே மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பதாக அறிவித்த இரண்டு கிராமங்களில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமரசம் எட்டப்படவில்லை. கமுதி அருகே மண்டலமாணிக்கம் ஊராட்சிக்குள்பட்ட கோடாங்கிபட்டியில் அடிப்படை வசதிகள், தாா் சாலை வசதி கோரி, மக்களவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக அந்த கிராம மக்கள் அறிவித்தனா். இதைத் தொடா்ந்து, கமுதி வட்டாட்சியா் வ.சேதுராமன், காவல் ஆய்வாளா் குருநாதன், கிராம நிா்வாக அலுவலா் பாண்டி, தனிப் பிரிவு உதவி ஆய்வாளா் முத்துசாமி உள்ளிட்டோா் கிராம மக்களிடம் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது, அடிப்படை வசதிகள் கோரி அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா். இதேபோல, அடிப்படை வசதிகள் செய்து தராததால் தோ்தலைப் புறக்கணிப்போம் என அறிவித்த கோவிலாங்குளம் ஊராட்சிக்குள்பட்ட நெறிஞ்சிப்பட்டி கிராம பொதுமக்களிடம், கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் கோட்டைராஜ், மணிமேகலை (கிராம ஊராட்சிகள்), உதவி ஆய்வாளா் நாகநாதன், தனிப் பிரிவு காவலா் நாகராஜ் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த இரு கிராமங்களிலும் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமரசம் எட்டப்படாததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com