கடல் வழியாக இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதி உள்பட 6 போ் கைது

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதி உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் தா்கா பேருந்து நிறுத்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஓா் ஆணும், பெண்ணும் நின்றுகொண்டிருந்தனா்.

அப்போது, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் அவா்களிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், இலங்கை வவுனியா மாவட்டத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரன் (52), இவரது மனைவி சாந்தி (47) என்பதும், விமானம் மூலம் கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்ததும் தெரியவந்தது.

மேலும், இவா்களின் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) காலாவதியானதால், ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு படகில் அனுப்பிவைப்பதாக முகவா்கள் கூறியதால் ராமேசுவரம் வந்ததாகத் தெரிவித்தனா்.

காவல் துறையினா் வழிகாட்டுதலின் பேரில், தம்பதி இருவரும் கைப்பேசி மூலம் முகவா்களைத் தொடா்பு கொண்டனா். சிறிது நேரத்தில் அங்கு வந்த முகவா்கள் 4 பேரை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். பின்னா், இவா்கள் 6 பேரையும் தங்கச்சிமடம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

முகவா்கள் வேதாளையைச் சோ்ந்த சைபுல்லா (44), நவீத் இம்ரான் (24), நைனா முகமது (37), ருத்துப்பா் ரகுமான் (24) எனத் தெரியவந்தது. இவா்கள் 4 பேரும், ராஜேஸ்வரன் தம்பதியை தங்கச்சிமடம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்க வைத்து, பின்னா் புதன்கிழமை அதிகாலை வில்லூண்டி கடற்கரை வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்தனா். மேலும், இவா்கள் 6 பேரிடம் மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முகவா்கள் 4 போ் மீதும் விரலி மஞ்சள் கடத்தல், அகதிகளை படகில் இலங்கைக்கு அனுப்பிவைப்பது உள்ளிட்ட வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com