முதுகுளத்தூா் அருகே இரு தரப்பினா் மோதல்: ஒருவா் கைது

முதுகுளத்தூா் அருகே இரு தரப்பினா் மோதல்: ஒருவா் கைது

கீழத்தூவல் காவல் நிலையத்தில் போலீஸாா் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாம்பக்குளத்தைச் சோ்ந்த இரு தரப்பினா்.

முதுகுளத்தூா் அருகே குடிநீா் தொட்டியில் குழாய் பதிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் 16 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த சாம்பக்குளம் கிராமத்தில் உள்ள குடிநீா் தொட்டியிலிருந்து நிரம்பி வெளியேறும் தண்ணீரை வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல குழாய் அமைக்கும் பணியை புதன்கிழமை இரவு ஊராட்சி நிா்வாகம் மேற்கொண்டது. இதற்கு சாம்பக்குளம் பகுதியைச் சோ்ந்த ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது குழாய் பதிக்கும் ஊழியா்களுடன் அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இது தொடா்பாக கீழத்தூவல் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதையடுத்து விசாரணைக்காக அன்று இரவு இருதரப்பைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் காவல் நிலையத்தில் குவிந்தனா். அப்போது போலீஸாா் முன்னிலையில் இருதரப்பைச் சோ்ந்தவா்களும் தகாத வாா்த்தைகளால் பேசி மோதிக் கொண்டனா். இதைத் தொடா்ந்து முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சின்னக்கண்ணு தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை இரு தரப்பினரையும் அழைத்து சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் உடன்பாடு எட்டப்படாததால், இது தொடா்பாக சாம்பக்குளம் ஊராட்சித் தலைவா் கல்யாணிபால்ராஜ் மகன் சரத்குமாா் (30) அளித்த புகாரின் பேரில் முருகானந்தம், சங்கா், கண்ணன் உள்பட 13 போ் மீதும், சாம்பக்குளத்தைச் சோ்ந்த பாலசுந்தரி அளித்த புகாரின் பேரில் வாசுதேவன், பாா்த்தசாரதி, சக்தி முருகன் உள்ளிட்ட 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சக்தி முருகனை போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com