தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாத அற்புதக் கவிஞர் பரமஹம்சதாசன்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாத உலகத்தின் அற்புதக் கவிஞர் பரமஹம்சதாசன் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார்.

தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாத உலகத்தின் அற்புதக் கவிஞர் பரமஹம்சதாசன் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார்.
காரைக்குடியில் ராமசாமி தமிழ்க்கல்லூரி, சாகித்ய அகாதெமி ஆகியவை சார்பில், கவிஞர் பரம்பஹம்சதாசன் நூற்றாண்டு விழா உரையரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது:
  படைப்பாளிகள் தாங்கள் வாழ்கின்றபோது அங்கீகரிக்கப்பட்டதில்லை. கம்பன் தொட்டு மகாகவி பாரதி வரைக்கும் இந்த நிலைதான். அந்த வகையில் இந்த மண்ணைச் சேர்ந்தவர் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாமல் பரமஹம்சருக்கு தாசனாக மாறிய கவிஞர் பரமஹம்சதாசன்.
 அவர் பக்தி இலக்கியமட்டுமல்லாமல் பன்முகப்பாங்கில் கவிதைகளை வழங்கியவர். உலகத்தின் அற்புத கவிஞர். உலக வெளிச்சத்திற்கு வெளிவராத அவரது கவிதைகளைப் புதுப்பித்து சாகித்ய அகாதெமி தந்திருக்கிறது. ஒரு சிறப்புமிக்க கவிஞரை அடையாளம் கண்டு சிறப்பித்திருக்கிறது என்றார்.
  விழாவில் சாகித்ய அகாதெமி தமிழ் ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளர் கி. நாச்சிமுத்து தலைமை வகித்துப் பேசுகையில், தனக்கென்று குடும்பம் அமைத்து வாழாமல் பரமஹம்சதாசன் துறவியாய் வாழ்ந்தவர். தாகூர் கவிதைகளைத் தமிழிசையில் பாடிய சந்தக்கவிஞர், சமுதாயக்கவிஞர் பரமஹம்சதாசன் என்றார்.
  சாகித்ய அகாதெமி தமிழ் ஆலோசனைக்குழு உறுப்பினர் பேராசிரியர் சொ. சேதுபதி அறிமுக உரையில், சமயம் கடந்து சமுதாயம் பேணிய இவர் பிரபஞ்சத்தை முன்னிறுத்திப் பாடியவர். பாரதிபோல் பல சமயக்கடவுளரையும் பக்தியோடு பாடியவர். உலக ஒருமைப்பாட்டை ஆன்மிக வழியில் உயர்த்திப் பிடித்தவர் என்றார்.
விழாவில் ராமசாமி தமிழ்க்கல்லூரி செயலர் பெரி. வீரப்பன் வாழ்த்திப்பேசினார். பரமஹம்சதாசன் உருவப்படத்தை பொன்னம்பல அடிகளார், பேராசிரியர் கி. நாச்சிமுத்து ஆகியோர் திறந்துவைத்தனர்.
 பிற்பகலில் நடைபெற்ற அமர்வுக்கு கவிஞர் மரு.பரமகுரு தலைமை வகித்து பரமஹம்சதானின் தவவாழ்வும் தமிழ்ப்பணியும் என்ற தலைப்பில் பேசினார். மற்றொரு அமர்வில் பேராசிரியர் பழ.முத்தப்பன் தலைமை வகித்து பரமஹம்சதாசனின் பாடல்களில் சமுதா யச்சிந்தனைகள் என்ற தலைப்பில் பேசினார்.
பேராசிரியர்கள் பழ. ராகுலதாசன், தெ. முருகசாமி ஆகியோர் கட்டுரைகளை வழங்கினார்.   முடிவில் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) சே. கணேசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com