சிவகங்கை மாவட்டத்தில் சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடனுதவி: ஆட்சியர்

சிறுபான்மையினர் தொழில் தொடங்க, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 2017-2018 ஆம் நிதியாண்டில்

சிறுபான்மையினர் தொழில் தொடங்க, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 2017-2018 ஆம் நிதியாண்டில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்பட உள்ளது என, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்க் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினரின் பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்கத்துடன், 2017-2018-ஆம் நிதியாண்டில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சில்லறை வியாபாரம் மற்றும் வியாபார அபிவிருத்தி, மரபுவழி சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் தொழில் சேவை நிலையங்கள், இலகுரக வாகனம் மற்றும் விவசாயம் தொடர்பான தொழில்கள் தொடங்க திட்டம்-1 மற்றும் திட்டம்-2 என இரண்டு வகைகளில் கடனுதவி வழங்கப்படும்.  இதில் பயன்பெற சிறுபான்மையின மக்களின் ஆண்டு வருமானம் கிராமப்புறமாக இருந்தால் ரூ. 81 ஆயிரமாகவும், நகர்ப்புறமாக இருப்பின் ரூ. 1 லட்சத்து 3 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்விக் கடன், குறுகிய கால உயர்திறன் வளர்ச்சிப் படிப்புக்கு திட்டம் 1 மற்றும் திட்டம் 2ஐ-இல் கடன் உதவி வழங்கப்படுகிறது. தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி, வேலைவாய்ப்பு படிப்புகள் (அதிகபட்சம் 5 ஆண்டுகள்) ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழங்கப்படும்.          
முதுகலை தொழிற்கல்வி, தொழிற்நுட்பக் கல்வி படிப்புகள் (அதிகபட்சம் 3 ஆண்டுகள்) ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் வீதம் ரூ. 9 லட்சம் வரை வழங்கப்படும். வெளிநாடுகளில் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி படிப்புகள் (அதிகபட்சம் 5 ஆண்டுகள்) ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் வீதம் ரூ. 20 லட்சம் வரை வழங்கப்படும்.
கறவை மாடுகள் வாங்கிட, ஆவின் நிறுவனத்தின் மூலம் கடன் தொகை வழங்கப்படும்.சிறுபான்மையினருக்கு சுயதொழில் தொடங்கிட தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வழங்கப்படுகிறது. இக்கடன் தனிநபர் கடன் விதிமுறைகள் அடிப்படையில்  தாய்கோ வங்கி மூலம் வழங்கப்படுகிறது.
கடன் தொகையை உரிய வட்டியுடன் ஒவ்வொரு மாதமும் கூட்டுறவு வங்கி நிர்ணயிக்கும் தொகையை தவறாமல் 5 ஆண்டுகளுக்கு (60 மாதங்கள்) செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்தினை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம், சிவகங்கை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் ஆகிய அலுவலகங்களில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.  
மேற்கண்ட திட்டங்களில் கடனுதவி பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்துடன், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்கு இருந்தால் மட்டும்) ஆகியவற்றுடன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.        
மேலும் இது குறித்த விவரங்களுக்கு, மேற்கண்ட அலுவலகங்களையும், கூட்டுறவு வங்கிகளையும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com