வைகையிலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்கான பங்கீட்டு நீரை பெற்றுத் தர வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

பூர்வீக வைகை பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் வைகை அணையிலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்குரிய பங்கீட்டு நீரை

பூர்வீக வைகை பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் வைகை அணையிலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்குரிய பங்கீட்டு நீரை பெற்றுத் தர வேண்டும் என சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். வேளாண் துறை இணை இயக்குநர் சேகர் முன்னிலை வகித்தார்.  
கூட்டத்தில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள்:  வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களுக்கு ஆறுகள் வழி தண்ணீர் பாயும் கால்வாய் மற்றும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். இதேபோல், மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை, யூனியன் கண்மாய்கள், குளங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும்.   
 மாவட்ட புள்ளியியல் துறையில் அலுவலர்கள் பற்றாக்குறையால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே,புள்ளியியல் துறைக்கு தகுந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும். 
மகாத்மா காந்தி நூறு நாள் வேலை உறுதி திட்டத்தில், மாவட்டத்தின் அனைத்துப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் வேலை மற்றும் ஊதியம்  வழங்க வேண்டும். விவசாயிகள் மற்றும் வேளாண் பணிகள் பாதிக்கும் வகையில் அரசு நிலங்களில் தைல மரங்களை நடுவதை வனத்துறை உடனடியாக நிறுத்த வேண்டும். சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமிருந்து விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தர வேண்டும்.
 கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக பெற்றுத் தர வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும். 
பூர்வீக வைகை பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் வைகை அணையிலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்குரிய பங்கீட்டு நீரை பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.  
 மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் பதிலளித்து பேசியதாவது: நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள கால்வாய் மற்றும் வாய்க்கால்கள், குளங்கள் ஆகியவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும்.
 விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை தர வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை  எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்து பேசி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்றார்.
 இக்கூட்டத்தில், கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ராஜேந்திரன் உள்ளிட்ட அனைத்து துறை உயர் அலுவலர்கள்,விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com