பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் கடையடைப்பு, சாலை மறியல்: 10 பெண்கள் உள்பட 83 பேர் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை நடைபெற்ற

சிவகங்கை மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிவகங்கையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 10 பெண்கள் உள்பட 83 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த கடையடைப்பு போராட்டத்தையொட்டி சிவகங்கையில் 90 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோன்று, மாவட்டத்தின் பிற பகுதிகளான மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 80 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார்கள் , ஆட்டோக்கள் வழக்கம் போல இயங்கின. 
இந்த கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனிடையே சிவகங்கை அரண்மனை வாசல் முன் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலர் கண்ணகி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சின்னத்துரை, சிபிஐஎம்எல் மாவட்ட அமைப்பாளர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 10 பெண்கள் உள்பட 83 பேரை சிவகங்கை நகர் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
காரைக்குடி:  காரைக்குடியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள், சில ஆட்டோ, கார்கள் மட்டும் ஓடின. காரைக்குடி பெரியார்சிலை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப்பார்வையாளர் சஞ்சய் தத் தலைமையில் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.சுந்தரம், காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவர் பாண்டிமெய்யப்பன், சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ். மாங்குடி, திமுக முன்னாள் அமைச்சர் மு.தென்னவன், திமுக நகரச் செயலர் குணசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக காலையில் வழக்கம் போல் கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட முயன்றவர்களை காங்கிரஸார் மற்றும் திமுகவினர் ஊர்வலமாகச் சென்று கடைகளை அடைக்கக் கூறியதால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. 
இதையொட்டி பல்வேறு பகுதிகளிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com