ரூ.2 ஆயிரம் உதவித் தொகை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்

தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் உதவித் தொகையை பெறுவதற்காக, வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளோர்

தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் உதவித் தொகையை பெறுவதற்காக, வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளோர் பட்டியலில் தங்களது பெயரையும் சேர்க்க வேண்டும் என, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் திரண்டனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. 
தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை பிப்ரவரி மாத இறுதிக்குள் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. எனவே, அரசு அலுவலர்கள் அந்தந்தப் பகுதி பயனாளிகளுக்கான பட்டியலை விரைந்து தயாரிக்குமாறும் அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதைத் தொடர்ந்து, பொதுமக்களும் தற்போது விண்ணப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, சிவகங்கை மாவட்டம் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை,திருப்பத்தூர், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில்,சிங்கம்புணரி ஆகிய 9 வட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், தமிழக அரசின் உதவித் தொகையை பெறுவதற்காக, தங்களது பெயரையும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மனு அளிக்க குவிந்தனர்.
இதன் காரணமாக  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது. இது குறித்து தகவலறிந்த சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் அழகர் தலைமையிலான போலீஸார், விரைந்து வந்து கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 
திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை மனு அளிப்பதற்காக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com