பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு வழங்காதது ஏன்? அதிமுக எம்.பி.யுடன், காங். எம்.எல்.ஏ வாக்குவாதம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டையில் மக்கள் தொடர்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டையில் மக்கள் தொடர்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை என சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி குற்றம்சாட்டி, சிவகங்கை மக்களவை உறுப்பினருடன் (அதிமுக) வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமிற்கு தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் தலைமை வகித்தார். சிவகங்கை மக்களவை உறுப்பினர் பிஆர். செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் க. லதா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவரும், காரைக்குடி சட்டபேரவை உறுப்பினருமான கே.ஆர். ராமசாமி பேசியது: அரசு சார்பில் நடைபெறும் முகாமிற்கு எனக்கு அழைப்பில்லை. அரசின் திட்டங்களை நாங்கள் எதிர்ப்பவர்கள் அல்ல. அது முறையாக மக்களுக்குச் சென்றடையவேண்டும் என்பதில் எங்களுக்கும் அக்கறை இருக்கிறது.
நான் சட்டபேரவைக்கூட்டத்தில் பயிர்க்காப்பீட்டுத்தொகை இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தேன். அதற்கு வேளாண்மைத்துறை அமைச்சரும் பதிலளித்திருக்கிறார். ஆனால் இன்று வரை விவசாயிகளுக்கு ஏன் இழப்பீட்டுத்தொகை வழங்கவில்லை என்ற காரணத்தை தெரிவித்துவிட்டு முகாமை நடத்துங்கள். 
மேலும் நமது மாவட்ட அமைச்சர்தான் பயிர்காப்பீட்டுத் தொகையை தற்போது வழங்கக்கூடாது என்று நிறுத்தி வைக்கச்சொன்னதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார் எனவும் எனக்குத் தெரியும். இதுவரை பயிர்காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீடுத் தொகை வழங்காததற்கான காரணத்தை அறிந்து கொள்ளாமல் இங்கிருந்து செல்லமாட்டேன் என்றார்.
இதற்கு பதிலளித்து சிவகங்கை மக்களவை உறுப்பினர் பி,ஆர். செந்தில்நாதன் குறிக்கிட்டுப் பேசியது: அனைத்துக் கூட்டுறவு வங்கிகளுக்கும் காப்பீட்டுத்தொகை வழங்கி விவசாயிகள் கணக்கில் ஏற்றப்பட்டு வருகிறது என்றார். இதனை கே.ஆர். ராமசாமி ஏற்க மறுத்ததால், இருவருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கூட்ட அரங்கில் ஏற்பட்ட சலசலப்பைக் கட்டுப்படுத்த போலீஸார் உள்ளே நுழைந்தனர். அப்போது கூட்ட அரங்கிற்குள் வந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் பேசியது: இம்மாவட்டத்திற்கு ரூ. 198 கோடி பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீட்டுத் தொகை வந்துள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு ரூ. 1000 வழங்கும் பணி நடைபெற்று வருவதால் இழப்பீட்டுத்தொகை இன்னும் வழங்கவில்லை. 
ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 13) முதல் அப்பணி தொடங்கும். சிலர் இழப்பீட்டுத்தொகை கோரி போலியாக பதிவு செய்திருப்பதாக புகார்கள் வந்ததால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் தான் இழப்பீட் டுத்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com