தபால் வாக்குகளை செலுத்தாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்: மே 23-க்குள் செலுத்த ஜாக்டோ-ஜியோ வேண்டுகோள்

தபால் வாக்குகளை செலுத்தாத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் மே 23 ஆம் தேதிக்குள்

தபால் வாக்குகளை செலுத்தாத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் மே 23 ஆம் தேதிக்குள் தபால் வாக்குகளை செலுத்த வேண்டும் என ஜாக்டோ- ஜியோ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் பணிச் சான்று மற்றும் தபால் வாக்குகள் வழங்கப்பட்டன. தேர்தல் பணிச் சான்று பெற்ற ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்குப்பதிவு நடந்த மையங்களிலேயே வாக்களித்து விட்டனர். இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ, தமிழகம் முழுவதும் 50 சதவீத ஆசிரியர்கள் தபால் வாக்குகள் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.    
100 சதவீதம் வாக்களிப்பை நிறைவேற்ற பல்வேறு விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்திய ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்குகளை அளிக்காமல் காலம் தாழ்த்துவது ஜனநாயக கடமையில் இருந்து தவறியதாகி விடும். முழுமையான வாக்குப் பதிவை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் ஆணையத்துக்கு துணை நிற்க வேண்டிய அரசு ஊழியர்கள் வாக்களிக்காமல் இருப்பது பணி விதிகளுக்கு முரண்பட்ட செயலாகும்.
தபால் வாக்குகள் பெற்ற ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் வாக்கு அளிக்க மே 23 ஆம் தேதி காலை 6 மணி வரை கால அவகாசம் உள்ளது. 
எனவே சிவகங்கை மாவட்டத்தில் தபால் வாக்குகள் கைகளில் கிடைக்கப் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கால தாமதமின்றி வாக்களித்து, அரசிதழில் பதிவு பெற்ற அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று, உரிய உறைகளில் வைத்து அருகில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் பணமில்லா பதிவு தபாலில் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com