மக்களவைத் தேர்தல்: சிவகங்கையில் வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிரசாரம்
By DIN | Published On : 17th April 2019 06:32 AM | Last Updated : 17th April 2019 06:32 AM | அ+அ அ- |

சிவகங்கை மக்களவை மற்றும் மானாமதுரை(தனி) தொகுதி இடைத் தேர்தலுக்கான இறுதி கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.16) மாலையுடன் நிறைவு பெற்றது.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங். வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை காலை மானாமதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து ,மாலையில் சிவகங்கை நகர் பகுதியில் ராமச்சந்திரனார் பூங்கா, பேருந்து நிலையம், நேரு பஜார் ஆகிய இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட அவர் மதுரை விலக்கு சாலையில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். இதேபோன்று,சிங்கம்புணரி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் குன்றக்குடியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஹெச்.ராஜா தனது ஆதரவாளர்களுடன் செவ்வாய்க்கிழமை காலை சிங்கம்புணரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.அதைத்தொடர்ந்து, தேவகோட்டை நகர் பகுதியில் மாலையில் பிரசாரம் மேற்கொண்ட அவர் ஆண்டவர் செட் பேருந்து நிறுத்தம் அருகே பிரசாரத்தை நிறைவு செய்தார்.
அமமுக சார்பில் போட்டியிடும் தேர்போகி வே.பாண்டி சிவகங்கை நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை பிரசாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தேவகோட்டை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாலையில் பிரசாரம் மேற்கொண்ட அவர் தியாகிகள் பூங்கா அருகே நிறைவு செய்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.சினேகன் சிவகங்கை, பூவந்தி, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, ராஜகம்பீரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர் மானாமதுரையில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சக்திப்ரியா சிவகங்கை நகர் முழுவதும் பிரசாரம் மேற்கொண்ட பின், அரண்மனை வாசல் முன் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...