வைகை ஆற்றில் மண்பாண்டத் தொழிலாளர்கள் மணல் எடுக்க நடவடிக்கை: எம்.எல்.ஏ. உறுதி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மண்பாண்டத் தொழில் தடையின்றி நடைபெறும் வகையில், தொழிலாளர்கள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மண்பாண்டத் தொழில் தடையின்றி நடைபெறும் வகையில், தொழிலாளர்கள் வைகை ஆற்றில் குறுமணல் எடுக்க அரசிடம் அனுமதி பெற்றுத் தரப்படும் என, தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்  எஸ். நாகராஜன் புதன்கிழமை உறுதியளித்தார்.
மானாமதுரையில் நடைபெறும் மண்பாண்டத் தொழில் இந்தியா மட்டுமின்றி, உலகளவில் புகழ்பெற்றதாகும். ஆனால், தற்போது மானாமதுரை பகுதி வைகை ஆற்றில்  மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், மண்பாண்டத் தொழிலுக்குத் தேவையான குறுமணல் எடுக்க முடியாமல், மண்பாண்டத் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். குறுமணல் கிடைக்காததால், மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். நாகராஜன், மானாமதுரையில் மண்பாண்டத் தொழில் நடைபெறும் குலாலர் தெருவுக்குச் சென்று, தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். 
அப்போது, ஆற்றில் குறுமணல் எடுக்க விதிக்கப்பட்டுள்ள தடையால், மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, பெண்கள் உள்பட தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர். இதையடுத்து, தொழிலாலர்களிடம் பேசிய நாகராஜன், மாவட்ட ஆட்சியரிடம் கலந்து பேசி, இப்பகுதி வைகை ஆற்றில் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு குறுமணல் எடுக்க சிறப்பு அனுமதி பெற்றுத் தரவும், தமிழக அரசின் மழைக்கால நிவாரணத் தொகை கிடைக்காத மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்கச் செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 
இதில், மானாமதுரை கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் தெய்வேந்திரன், அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com