மானாமதுரையில் ஆடிப் பிரமோற்சவ விழா: வீரழகர் பூப்பல்லக்கில் பவனி

மானாமதுரையில் நடைபெற்று வரும் ஆடிப் பிரமோற்சவ விழாவில் செவ்வாய்க்கிழமை இரவு சுந்தரபுரம்

மானாமதுரையில் நடைபெற்று வரும் ஆடிப் பிரமோற்சவ விழாவில் செவ்வாய்க்கிழமை இரவு சுந்தரபுரம் கடைவீதியார் மண்டகப்படியில் ஸ்ரீ வீரழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதிகளில் பவனி வந்தார்.
 மானாமதுரை ஸ்ரீவீரழகர் கோயிலில் ஆடிப் பிரமோற்சவ விழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 7 ஆம் நாள் சுந்தரபுரம் கடைவீதி மண்டகப்படிதார்கள் மேளதாளம் வாணவேடிக்கையுடன் கோயிலிலிருந்து சுந்தரராஜப் பெருமாளை குண்டுராயர் தெருவில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிக்கு அழைத்து வந்தனர். இங்கு இரவு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின் பெருமாள் கடை வீதிகளில் பத்தி உலாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கடைவீதிகளில் வியாபாரிகள் சுவாமியை வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர். அதன்பின் இரவு 10.30  மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் வீரழகர் எழுந்தருளினார். மண்டகப்படியிலிருந்து புறப்பட்ட சுந்தரராஜப் பெருமாள் சுந்தரபுரம் அக்ராகாரம், செட்டியதெரு, நல்லதம்பியாபிள்ளை தெரு, புதுத்தெரு, சிவகங்கை சாலை, மாரியம்மன்கோயில் தெரு, பழைய தபால் அலுவலகத் தெரு ஆகிய பகுதிகளில் பவனி வந்தார். அப்போது தங்களது வீடுகளின் முன்பு பெருமாளை வரவேற்று தேங்காய் பழத்துடன் பூஜைகள் நடத்தி பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் புதன்கிழமை அதிகாலை பெருமாள் கோயிலைச் சென்றடைந்தார். 
 மண்டகப்படிக்கான ஏற்பாடுகளை சுந்தரபுரம் கடைவீதியார் மண்டகப்படி நிர்வாகிகள் செய்திருந்தனர். பிரமோற்சவ விழாவில் 8 ஆம் நாளாக புதன்கிழமை இரவு சிவகங்கை கார்த்திகேய வெங்கடாஜலபதி ராஜா மண்டகப்படியில் வீரழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். திருவிழாவின் 9 வது நாள் விழாவாக வியாழக்கிழமை (ஆக. 15) இரவு வீரழகர் மின்விளக்கு தேரில் பவனி வருதல் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com