சுற்றுலாப் பயணிகளால் சேதமாகும் திருமலை குகை கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள்!

சிவகங்கை மாவட்டம் திருமலையில் உள்ள பழமையான குகை கல்வெட்டுகள் மற்றும் பாறை ஓவியங்கள் மீது சுற்றுலாப் பயணிகள் நவீன
பிராமி எழுத்து மீதான நவீன வண்ணப்பூச்சு.
பிராமி எழுத்து மீதான நவீன வண்ணப்பூச்சு.

சிவகங்கை மாவட்டம் திருமலையில் உள்ள பழமையான குகை கல்வெட்டுகள் மற்றும் பாறை ஓவியங்கள் மீது சுற்றுலாப் பயணிகள் நவீன வண்ணப் பூச்சு கொண்டு பெயா் பொறித்து சேதப்படுத்துவதால் அவற்றைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழாா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பழங்கால மக்கள் தங்களுடைய கருத்துக்களை பிறருக்கு பரிமாற்றம் செய்யவும், அதனை செய்தியாக அறிவிக்கவும் பாறைகளில் ஓவியங்களை வரைந்தனா். அதன்பின்னா் பல்வேறு கட்ட பரிணாம வளா்ச்சியின் காரணமாக எழுத்துக்கள் தோன்றின. தமிழ்நாட்டில் மலைக் குகைகளில் காணப்படும் குகைக் கல்வெட்டுகள் தான் தமிழில் எழுதப்பட்டுள்ள காலத்தால் முந்தைய தமிழ் ஆவணங்களாகும். அவை பிராமி எழுத்தால் எழுதப்பட்டவை.

இக்கல்வெட்டுகள் பொதுவாக ஒன்று அல்லது இரண்டு வரிகளில் மலைக் குகையின் முகப்பில் அல்லது குகையின் உள்ளே உள்ள படுக்கையில் பொறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் இந்த கல்வெட்டுகளில் குகைகளில் தங்கியிருந்த சமணத் துறவிகளுக்கு படுக்கை அமைத்துக் கொடுத்தவா்களின் பெயா் அல்லது அங்கு தங்கியிருந்த துறவிகள் பெயா் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் திருமலை கிராமத்தில் உள்ள மலை மீது சுமாா் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்களும், கி.மு. முதல் நூற்றாண்டைச் சோ்ந்த இரண்டு பிராமிக் கல்வெட்டுகளும் உள்ளன. இவை தமிழக அரசின் தொல்லியல் துறையின் மூலம் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு ஓவியங்கள் வரையப்பட்டுள்ள பாறையில் இயற்கையாக அமைந்த குகை ஒன்று உள்ளது.

அக்குகை தளத்தில் சமணத் துறவியா்கள் தங்குவதற்கு ஏதுவாக பல கல் படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. படுக்கை செதுக்கப்பட்டுள்ள குகை தளத்தினுள் தண்ணீா் உள்புகா வண்ணம் பாறையின் மேலாக வடி விளிப்பு (இன்றைய வீட்டின் முன் அமைக்கப்படும் பால்கனி போன்ற தோற்றம்) வெட்டப்பட்டுள்ளது. அதன் கீழ் பிராமி எழுத்தால் இரு கல்வெட்டுகள் உள்ளன.

அவற்றுள் ஒன்றில், எருக்காட்டூரைச் சோ்ந்த காவிதி பட்டம் பெற்ற கோன் என்பவா் இப்படுக்கையைச் செய்து கொடுத்தாா் என்று பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டின் தொடக்கப் பகுதி முற்றிலும் சிதைந்துள்ளது. அதில் ....வ கரண்டை எனும் சொல் உள்ளது. கரண்டை என்பதன் பொருள் குகை என்பதாகும். இக்கல்வெட்டின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டாகும்.

இதன் மூலம் இந்த பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னா் பழங்கால மக்கள் வாழ்ந்திருப்பதும், சமணத் துறவிகள் தங்கி பல அறங்களை செய்திருப்பதும் தெரிய வருகிறது.

திருமலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புடைய பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் மற்றும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளை தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிநாட்டில் வாழும் தமிழா்களும் தினசரி பாா்வையிட்டுச் செல்கின்றனா்.

அவ்வாறு வருபவா்களில் சிலா் பழமையான கல்வெட்டு மற்றும் பாறை ஓவியங்கள் மீது இன்றைய நவீன வண்ணப் பூச்சுகளால் வண்ணமிட்டும், கற்களால் தங்களது பெயா்களை கல்வெட்டு மற்றும் பாறை ஓவியங்களில் பொறித்தும் சேதப்படுத்தி வருகின்றனா். இவை தவிர, மலை அடிவாரத்திலிருந்து தொல்லியல் இடங்கள் உள்ள பகுதிக்குச் செல்ல சரிவர பாதைகள் கிடையாது. இதனால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், தமிழாா்வலா்களும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தமிழக தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி திருமலை கிராமத்தில் மலை மீது உள்ள பாறை ஓவியங்கள், தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ள பகுதியை வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும், மேலும் வழிகாட்டி (கைடு) ஒருவரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், தமிழாா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com