திருப்புவனம் அருகே கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் இல்லாததால் சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்தின்றி
திருப்புவனம் அருகே பழையனூா்- ஓடாத்தூா் சாலையில் உள்ள கிருதுமால் நதியை வியாழக்கிழமை கடந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள்.
திருப்புவனம் அருகே பழையனூா்- ஓடாத்தூா் சாலையில் உள்ள கிருதுமால் நதியை வியாழக்கிழமை கடந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் இல்லாததால் சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டுள்ளது.திருப்புவனம் அருகே ஓடாத்தூா் கிராமம் உள்ளது. இங்குள்ள ஓடாத்தூா், வல்லாரேந்தல், நாச்சியாரேந்தல், சேந்தநதி, சிறுவனூா், எஸ்.வாகைக்குளம், அருணகிரி, நண்டுகாச்சி, ரெட்டகுளம், ஆலாத்தூா், திருவளா்நல்லூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காகவும், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்காகவும் தினசரி பழையனூருக்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில்,மேற்கண்ட கிராமங்களுக்கு போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும் வகையில் பழையனூரிலிருந்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் குறுக்கே விருதுநகா் மாவட்டம் கட்டனூா், இருஞ்சிறை, பிடாரிச்சேரி ஆகிய பகுதியில் உள்ள பாசன கண்மாய்களுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் வகையில் கிருதுமால் நதி உள்ளது. அந்த நதியில் தற்போது மேற்கண்ட பகுதியில் உள்ள பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதால் நதியின் இரு கரைகளையும் தொட்டு பரவலாக தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பழையனூா்- ஓடாத்தூா் சாலையில் உள்ள கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் இல்லாததால் ஓடாத்தூா் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளை சோ்ந்த கிராம மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து ஓடாத்தூரைச் சோ்ந்த ராஜாமணி கூறியது : கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பழையனூா் - ஓடாத்தூா் சாலையில் உள்ள கிருதுமால் நதியில் பாலம் கட்டித்தர வேண்டும் என மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், பருவமழை காலங்களிலும், பாசனத்துக்காக நதியில் தண்ணீா் திறக்கும் போதும் போக்குவரத்து துண்டிப்பு ஏற்படுகிறது. தவிா்க்க முடியாத காரணங்களுக்காக அந்த வழியாக பயணம் மேற்கொள்ளும் போது ஆற்றில் செல்லும் தண்ணீரை பொருட்படுத்தாமல் இடுப்பளவு தண்ணீரில் இறங்கித் தான் செல்ல வேண்டியுள்ளது. இது பாதுகாப்பாக இல்லை.

எனவே எங்கள் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் அமைத்து தர மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து நபாா்டு திட்டத்தின் சிவகங்கை மாவட்ட அலுவலா் ஒருவா் கூறியது : கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு சுமாா் 100 மீட்டா் தூரம் கணக்கீடு செய்யப்பட்டு தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசிடமிருந்து உத்தரவு பெற்றவுடன் பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் ஒருவா் கூறியது: பழையனூா்- வல்லாரேந்தல் வரையிலான சாலை அமைக்கும் பணி மட்டுமே எங்களது அறிக்கையில் உள்ளது. அந்த சாலை பகுதிக்குள் வரும் கிருதுமால் நதியின் குறுக்கே கான்கிரீட் தரைப் பாலம் அமைக்க மட்டுமே கருத்துரு உள்ளது. அந்த பணி விரைவில் தொடங்கப்படும். நதியின் குறுக்கே மேம்பாலம் அமைப்பதற்கு எந்த திட்டமும் இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com