காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய்: விவசாயிகள் கூட்டமைப்புக் கூட்டம்

சிவகங்கையில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய் விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

சிவகங்கையில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய் விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநில தலைவர் மிசா.மாரிமுத்து தலைமை வகித்தார். சங்கத்தின் பொதுச்செயலர் எம்.அர்ச்சுணன், நிர்வாகிகள் ஆர். முருகேசன், மதுரைவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில், காவிரியிலிருந்து கடலுக்கு வீணாகச் செல்லும் தண்ணீரைப் பயன்படுத்தி கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய ஏழு மாவட்டங்களில் 8 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து தொடங்க வேண்டும்.
 வைகை அணையிலிருந்து பூர்வீக ஆயக்கட்டு ஒரு போக சாகுபடி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். வைகை அணை மற்றும் கால்வாய், கண்மாய் பாசனப் பகுதியை நிர்வாகம் செய்யும் வகையில் வைகை வடிநிலக் கோட்டம் என தனியாக பொதுப்பணித்துறை கட்டமைப்பு உருவாக்க வேண்டும். 
காவிரி ஆற்றில் மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டும் பணிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க புதிய சுரங்கப் பாதைகள் அமைக்க வேண்டும். வைகை அணை உள்பகுதியில் படிந்துள்ள மணலை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 இக்கூட்டத்தில் மாநில அளவிலான நிர்வாகிகள் சோழாந்தூர் பாலகிருஷ்ணன், முகவை மலைச்சாமி,விருதுநகர் ஜெயச்சந்திரன், கோபாலகிருஷ்ணன், புதுக்கோட்டை முருகேசன், மானாமதுரை ராம முருகன், பார்த்திபனூர் ராமு, தெ.புதுக்கோட்டை ராமு, ராமச்சந்திரன், திருச்சி வி.எம்.பாரூக் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com