விதை நெல் வழங்கிய விவசாயிகளுக்கு பணம் கொடுக்காமல் 7 மாதங்களாக அலைக்கழிப்பு

சிவகங்கையில் உள்ள அரசு விதைப் பண்ணைக்கு நெல் வழங்கிய விவசாயிகளுக்கு 7 மாதமாக பணம்

சிவகங்கையில் உள்ள அரசு விதைப் பண்ணைக்கு நெல் வழங்கிய விவசாயிகளுக்கு 7 மாதமாக பணம் வழங்காததால் அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
பருவகாலங்களில் விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகளை தரமானதாகவும், மானிய விலையிலும் வழங்கும் வகையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் விளைவிக்கப்படும் நெல், கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர் வகைகள் அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டார வேளாண் அலுவலகம் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
அதனை சிவகங்கை - தொண்டி சாலையில் உள்ள விதைப் பரிசோதனை மையத்தில் முறையாக ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, அதே வளாகத்தில் விதை இருப்பு வைப்பறையில் சேமித்து வைக்கப்படும். பின்னர் பருவகாலங்களில் தேவையான விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில், அரசு விதைப் பண்ணைக்கு கடந்த ஜனவரி மாதம் நெல் வழங்கிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லையாம். இதனால், தினசரி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி நடப்பாண்டு வேளாண் பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெரியகிளுவத்தியைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி கூறியது: அரசு விதைப் பண்ணைக்கு நெல் வேண்டும் என வேளாண் துறை அலுவலர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கடந்த ஜனவரி மாதம் எனது வயலில் அறுவடை செய்த 120 மூட்டை நெல்லை விதைப் பண்ணைக்கு வழங்கினேன்.
இதையடுத்து 120 மூட்டைக்கும் ரூ.ஒரு லட்சத்துக்கு 15 ஆயிரம் ஒரு வாரத்தில் எனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை வரவு வைக்கப்படவில்லை. 
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டபோது மக்களவைத் தேர்தலை காரணம் காட்டி பணம் தாமதமாக வரவாகும் என தெரிவித்தனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்து மூன்று மாதங்களாகியும் பணம் வழங்கவில்லை. மீண்டும் இதுகுறித்து கேட்டதற்கு அலுவலர்கள் யாரும் சரிவர பதிலளிக்கவில்லை. 
ஒரு ஏக்கருக்கு உழவு முதல் அறுவடை வரை சுமார் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. போதிய மழையில்லாததால் மகசூல் மிகவும் குறைவாகத்தான் கிடைக்கிறது. இருப்பினும் நிலத்தை தரிசாக விடக்கூடாது என்பதற்காக வேளாண் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இந்நிலையில் அரசு விதைப் பண்ணைக்கு வழங்கிய நெல்லுக்கு 7 மாதமாக பணம் வழங்கவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் நடப்பாண்டில் வேளாண் பணியை தொடங்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றோம். ஆகவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அரசு விதைப் பண்ணைக்கு நெல் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து வேளாண் துறையைச் சேர்ந்த உதவி இயக்குநர் ஒருவர் கூறியது: மாவட்டம் முழுவதும் விதைப் பண்ணைக்கு கொள்முதல் செய்யப்படும் நெல் உள்ளிட்ட தானியங்கள் விதை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும். முறையான ஆய்வுக்குப் பின்னர் விதைச் சான்று வழங்கிய உடன் விவசாயிகளுக்கு உரிய தொகையை வழங்குமாறு சிவகங்கை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் மூலம் சென்னை இயக்குநர் அலுவலகத்துக்கு கருத்துரு அனுப்பப்படும்.  அந்தவகையில் கடந்த ஜனவரி மாதம் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகம் மூலம் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் அங்கிருந்து எந்த தகவலும் இல்லை. 
இதுபற்றி தொடர்ந்து, சென்னையில் உள்ள வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் பேசி வருகிறோம். எனவே இன்னும் ஓரிரு தினங்களில் விவசாயிகளுக்கு உரிய பணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com