அ.விளாக்குளம் கிராமத்தில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அ.விளாக்குளம் கிராமத்தில் நடந்த புரவி எடுப்பு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அ.விளாக்குளம் கிராமத்தில் நடந்த புரவி எடுப்பு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. 
 இக்கிராமத்திலுள்ள நிறைகுளத்து அய்யனார் கோயிலில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி கிராம மக்கள் சார்பில் மாட்டுவண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது. பெரியமாடு, சின்னமாடு என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மாட்டு வண்டிகள் பந்தயத்தில் கலந்து கொண்டன. முதலில் பெரியமாடுகளுக்கு பந்தயம் நடத்தப்பட்டது. இதில் 8 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இவற்றுக்கு விளாக்குளம் கிராமத்திலிருந்து மானாமதுரை அரசு மருத்துவமனை வரை தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இரண்டாவதாக சின்ன மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது. இதில் 13 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.  இவற்றுக்கு அ.விளாக்குளம் கிராமத்திலிருந்து மாங்குளம் விலக்கு வரை தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பெரியமாட்டு வண்டிப் பந்தயத்தில் மேலூர் ஆட்டுக்குளத்தைச் சேர்ந்த அழகர்மலையான் ரத்தினம் வண்டி முதல் பரிசை வென்றது. சின்னமாடு பந்தயத்தில் மதுரை பாண்டிகோயில் பாண்டியராஜன் மாட்டு வண்டி முதலிடம் பெற்றது. முதல் இடத்தைப் பெற்ற மாட்டு வண்டிகளுக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற இரு பிரிவு மாட்டு வண்டிகளுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. 
மேலும் மாடுகளுக்கும் அதனை ஓட்டிச் சென்றவர்களுக்கும் பரிசு வழங்கும் விழாவில் மரியாதை செய்யப்பட்டது. மாட்டு வண்டிப் பந்தயத்தைக் காண மானாமதுரை- தாயமங்கலம் சாலையில் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com