திருப்பாச்சேத்தி வைகையாற்றுக்குள் தடுப்பணை கட்டும் பணி: அமைச்சர் ஆய்வு
By DIN | Published On : 24th June 2019 07:32 AM | Last Updated : 24th June 2019 07:32 AM | அ+அ அ- |

திருப்பாச்சேத்தி வைகையாற்றுக்குள் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் பாஸ்கரன், எம்.எல்.ஏ நாகராஜன் ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வைகையாற்றில் தண்ணீர் வரும் காலங்களிலும், மழை பெய்யும்போதும் தண்ணீரை தேக்கி வைத்து அதன்மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்ந்தும் வகையில் திருப்பாச்சேத்தி வைகையாற்றுக்குள் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
இப்பணியை அமைச்சர் க. பாஸ்கரன், மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.நாகராஜன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திட்டப் பணிகள் விபரம் குறித்து அங்கிருந்த பொறியாளர்கள், அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். அதன்பின்னர் அமைச்சர் கூறியது:
தடுப்பணை கட்டும் பணியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஏராளமானோர் பணி செய்து வருகின்றனர். தற்போது இத் திட்டம் மானாமதுரை தொகுதியில் வைகையாற்றுக்குள் இரு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 5 இடங்களில் இந்த தடுப்பணை கட்ட திட்டம் உள்ளது. அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன என்றார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் வடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜகாங்கீர், முத்துக்குமார், வட்டாட்சியர் ராஜா, மானாமதுரை முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.