மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சியில் செயல் அலுவலர் பணியிடங்கள் காலி: பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடங்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடங்கள் பல நாள்களாக காலியாக இருப்பதால் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 
மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி 18 வார்டுகளைக் கொண்டது. மாவட்டத்தில் அதிக வருவாய் உள்ள பேரூராட்சி பட்டியலில் உள்ளது. இதை நகராட்சியாக தரம் உயர்த்தத் தேவையான அனைத்து ஆவணங்களும் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் நகராட்சியாக தரம் உயர்த்தப்படாமல், இதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 
இந் நிலையில் இப் பேரூராட்சியில் செயல் அலுவலராக இருந்த ஜான்முகமது பதவி உயர்வுபெற்று ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிதர்கா சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலராக பொறுப்பேற்றுள்ளார். அதன் பின்னர் இங்கு செயல் அலுவலர் நியமிக்கப்படாமல் உள்ளார். திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பாக மானாமதுரையை கவனித்து வருகிறார். 
இதனால் இவர் வாரத்தில் சில நாள்கள் மட்டும் இங்கு வந்து செல்வதால் வழக்கமாக நடைபெறும் பணிகள் பாதிக்கப்படுவதாக இப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக வரி வசூல், கட்டட வரைபடங்களுக்கு அனுமதி, வளர்ச்சித் திட்டப் பணிகள், குடிநீர் பிரச்னை உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 
இதேபோல் இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டதால் இங்கும் அந்த பணியிடம் காலியாக உள்ளது. நாட்டரசன்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் இளையான்குடியை கூடுதலாக கவனித்து வருகிறார். மேலும் இங்கு சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்த மணிகண்டன் சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு இடமாறுதலாகிச் சென்றதால் இப் பணியிடமும் காலியாக உள்ளது. இதனால் இளையான்குடியில் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்படுகிறது.  செயல் அலுவலர் இல்லாததால் இளையான்குடி பேரூராட்சி  அலுவலகத்திலும் வழக்கமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 
மக்களவைத் தேர்தலும் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இத் தொகுதியைச் சேர்ந்த மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சிகளுக்கு செயல் அலுவலர்களையும் இளையான்குடி பேரூராட்சிக்கு சுகாதார ஆய்வாளரையும் உடனே நியமிக்க  வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com