ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் பெயரில் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்க வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை
By DIN | Published On : 06th May 2019 12:54 AM | Last Updated : 06th May 2019 12:54 AM | அ+அ அ- |

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற சிவகங்கை கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிவகங்கையில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் சிவகங்கை கிளையின் 13-வது மாநாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கிளைத் தலைவர் காளிராசா தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் சாஸ்தாசுந்தரம் முன்னிலை வகித்தார்.
இதில், பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ் .கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் மற்றும் கே.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஆகியோரை பாராட்டுவதாகவும், தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி அனைத்து கோயில்களிலும் யாகம் வளர்க்க வேண்டும் என ஆணையிட்ட இந்து சமய அறநிலையத் துறைக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கண்டனம் தெரிவிக்கிறது எனவும், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பெயரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி தொடக்க உரையாற்றினார். கிளைச் செயலர் பிரபாகரன் இந்த இயக்கத்தின் சிவகங்கை கிளையின் செயல்பாடுகள் குறித்து வாசித்தார். வரவு,செலவு அறிக்கையை கிளைப் பொருளாளர் சங்கரலிங்கம் சமர்ப்பித்தார். மாவட்டச் செயலர் ஜீவானந்தம் நிறைவுரையாற்றினார்.
கூட்டத்தில் சமம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தை ஆரோக்கியமேரி, பாடகர் லெனின் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.