திருப்பாச்சேத்தி அருகே வைகை ஆற்றுக்குள் மணல் திருட்டு
By DIN | Published On : 15th May 2019 07:34 AM | Last Updated : 15th May 2019 07:34 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே வைகை ஆற்றுக்குள் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்பாச்சேத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் மழை நீர் மற்றும் வைகை அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரை சேமித்து வைப்பதற்காக, திருப்பாச்சேத்தி அருகே உள்ள வைகை ஆற்றுக்குள் ரூ. 58 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டுவதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, ஆற்றின் நடுவே தடுப்பணை கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு, மணலை அருகிலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது. தடுப்பணை கட்டுமானப் பணிக்கு பயன்படுத்துவதற்காக, இந்த மணலை அள்ளி பணியாளர்கள் மூட்டைகளில் கட்டி வைத்து வருகின்றனர். ஆனால், மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்ட மணல் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படவில்லையாம். மாறாக, சிலர் இரவு நேரங்களில் அந்த மணலை கடத்திச் சென்று விடுவதாக, திருப்பாச்சேத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள ஆற்றுப்படுகையில் இரவு நேரங்களில் அதிகளவு மணல் திருட்டு நடைபெற்று வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படும் என, பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, திருப்பாச்சேத்தி அருகே உள்ள வைகை ஆற்றுப் பகுதியில் மணல் திருட்டு நடப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.