சிங்கம்புணரி அருகே அமமுக பிரமுகர் கொலை: சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அமமுக பிரமுகர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து, அவரது உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பாக சனிக்கிழமை போராட்டத்தில்
சிங்கம்புணரி அருகே அமமுக பிரமுகர் கொலை: சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அமமுக பிரமுகர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து, அவரது உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உதினிப்பட்டியைச் சேர்ந்தவர் காதர்ஷா. வழக்குரைஞரான இவர், உதினிப்பட்டி ஜமா அத் தலைவராகவும், அமமுக  சிறுபான்மைப் பிரிவு வடக்கு மாவட்டச் செயலராகவும் இருந்தார்.  இவர், சிங்கம்புணரியிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு உதினிப்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். 
அப்போது,  மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்து காயமடைந்த இவரை, அப்பகுதியினர் மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காதர்ஷா ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும், அவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  
அதையடுத்து, விபத்து வழக்காகப் பதிவு செய்த கொட்டாம்பட்டி காவல் நிலைய போலீஸாருடன், காதர்ஷாவின் உறவினர்கள் மற்றும் அமமுக கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொலை வழக்காகப் பதிவு செய்து குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து காதர்ஷாவின் மனைவி அன்வர்பானு, கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அதே ஊரைச் சேர்ந்த செல்வம் என்ற காதர்மைதீன், செல்லக்கண்ணு, சக்கரவர்த்தி, இப்ராஹிம் ஒலி, ரியாஸ், மற்றும் ராஜா ஆகிய 6 பேர், ஜமா அத் பொறுப்பு வகிப்பது தொடர்பாக இறந்த காதர்ஷாவுக்கும், இவர்களுக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், இவர்கள்தான் 
தனது கணவர் காதர்ஷாவை கொலை செய்துள்ளனர் எனவும் அதில் தெரிவித்துள்ளார். 
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், இறந்த காதர்ஷா, உதினிப்பட்டியில் சொந்தமாகக் கட்டிவரும் தண்ணீர் சுத்திரிப்பு நிலையத்தில் இருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தி மற்றும் கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து, தனது இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு வந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. 
இது தொடர்பாக, மேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இதனிடையே, கொலைக் குற்றவாளிகளை கைது செய்யும் வரை,  காதர்ஷாவின் சடலத்தை பெற்றுச் செல்ல மறுத்து, உறவினர்கள் மற்றும் கட்சியினர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது. அதையடுத்து, குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, சடலத்தை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com