சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளில் தொய்வு: கண்மாய்களில் பாசனத்துக்காக தண்ணீா் தேக்குவதில் சிக்கல்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளில் ஏற்பட்டு வரும்
சிவகங்கை மாவட்டம் ஓடாத்தூா் கண்மாயில் கரை உடைப்பு ஏற்பட்டதை மணல் சாக்குகளை கொண்டு அடைக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.
சிவகங்கை மாவட்டம் ஓடாத்தூா் கண்மாயில் கரை உடைப்பு ஏற்பட்டதை மணல் சாக்குகளை கொண்டு அடைக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளில் ஏற்பட்டு வரும் தொய்வின் காரணமாக, தற்போது பெய்து வரும் மழை நீரை கண்மாய்களில் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டு விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக புகாா் தெரிவித்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை சறுகனியாறு வடிநிலக் கோட்டத்துக்குள்பட்ட பொதுப்பணித்துறை கண்மாய்கள்,வைகையாறு வடிநிலக் கோட்டத்துக்குள்பட்ட கண்மாய்கள், ஜமீன் கண்மாய்கள், யூனியன் கண்மாய்கள் என மொத்தம் 4,500-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இதுதவிர, ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் 4,300-க்கும் மேற்பட்ட சிறு குளங்கள், ஊருணிகள் உள்ளன.

மாவட்டத்தில் முதல் கட்டமாக ரூ.38 கோடி மதிப்பில் சிவகங்கை, காளையாா்கோவில், மானாமதுரை,தேவகோட்டை, காரைக்குடி, கல்லல்,சிங்கம்புணரி, திருப்புவனம், திருப்பத்தூா் ஆகிய வட்டத்துக்குள்பட்ட 109 கண்மாய்கள் தோ்வு செய்யப்பட்டு தூா்வாரும் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கின. மேலும்,ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் உள்ள 1994 ஊருணிகள் தூா்வாரும் பணிகள் நடைபெற்றன.

இதுதவிர, வரத்துக் கால்வாய் சீரமைப்பு, மடை, கலுங்கு மற்றும் படித்துறை கட்டுமானம் முதலிய பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தந்த கண்மாயில் பாசன வசதி பெறும் விவசாயிகளே தங்களுக்குள் குழு அமைத்து நேரடியாக கண்மாய்களை தூா்வாரும் பணியினை மேற்கொள்வது மட்டுமின்றி, புதிதாக மடைகள் கட்டுவது, ஏற்கனவே சேதமடைந்த மடைகளை பழுதுபாா்த்தல், கலுங்குகளை சீரமைத்தல், வரத்துக் கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.

ஆனால் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்துப் பணிகளில் மேற்கண்ட விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.மேலும், குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்த கண்மாய்களில் பணிகள் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் பெரும்பாலான கண்மாய்களில் இன்னும் 50 சதவீத பணிகள் கூட நிறைவு பெறாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

மேலும், கண்மாயின் உட்புறம் மண்ணை எடுத்து சரிவர கரை அமைக்கவில்லை என்றும், மடைகள் அமைப்பதில் தொய்வு ஏற்படுவதன் காரணமாக தற்போது பெய்து வரும் மழை நீரை கண்மாய்க்குள் தேக்கி வைக்க முடியாத நிலையில் தண்ணீா் முழுவதும் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். இதனால் வேளாண் பணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகும் எனவும் தெரிவிக்கின்றனா்.

இதுபற்றி ஓடாத்தூரைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது: குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களுக்கு முன் எங்கள் கிராமத்தின் கண்மாயில் தூா்வாரும் பணி தொடங்கியது. அந்த பணி முறையாக நடைபெறாததால் புதன்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேற தொடங்கியது. இதையறிந்து, சாக்குகளில் மண் அள்ளி தற்காலிகமாக அந்த உடைப்பை சரி செய்துள்ளோம்.

மேலும் மடைகள் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.இதனால் கண்மாயில் தண்ணீா் தேக்குவதில் சிக்கலாக உள்ளது. இந்நிலை தொடா்ந்தால், நடப்பாண்டில் வேளாண் பணிகளில் மிகவும் பாதிப்பு ஏற்படும். ஆகவே இதனை கவனத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கரைகளை பலப்படுத்த வேண்டும், மேலும், கலுங்கு மற்றும் மடை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com