ஆசிரியப் பணி மிகப் பெரிய சவால்கள் நிறைந்தது

ஆசிரியப் பணி பெரிய சவால்கள் நிறைந்தது என்று தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத் துணைவேந்தர் கே. பார்த்தசாரதி தெரிவித்தார்.


ஆசிரியப் பணி பெரிய சவால்கள் நிறைந்தது என்று தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத் துணைவேந்தர் கே. பார்த்தசாரதி தெரிவித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தொலை தூரக் கல்வி இயக்கக கல்வியியல் துறையின் சார்பில் 2019-20 ஆம் ஆண்டிற்கான இளங்கலை கல்வியியல் படிப்பு ( பி.எட்., 2 ஆண்டுகள்) ஆசிரிய மாணவர்களுக்கான தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கே. பார்த்தசாரதி பேசியது:
நம்நாட்டில் 952 பல்கலைக்கழகங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 63 பல்கலைக் கழகங்கள் உள்ளன. அதில் அரசு பல்கலைக் கழகங்கள் 23 ஆகும். இதிலும் 13 பல்கலைக் கழகங்களே உயர்கல்வித் துறையின் கீழ் வருகின்றன. ஆசிரியப் பணி பெரிய சவால்கள் நிறைந்தது. மாணவர்களின் மனநிலையை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்றார் போன்று ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். மேலும் இன்றைய காலத்திற்கேற்றவாறு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தகவல்களை வழங்க வேண்டும். கல்லூரியிலும், பல்கலைக் கழகங்களிலும் மாணவர்கள் தாங்களாகவே படிப்பதற்கு வழிகாட்டுவதோடு மாணவர்களுக்கு பாடம் சார்ந்த சந்தேகங்களை தெளிவுபடுத்துவது ஆசிரியரின் கடமையாகும் என்றார்.
விழாவில், அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசியது: தேர்வில் வெற்றி பெறுவதற்காக படிப்பது வெறும் படிப்பாகும். வாழ்க்கைக்காக படிப்பதுதான் உண்மையான கற்றலாகும். ஆசிரியர்கள் கற்பித்தலுக்கான அனைத்துத் திறன்களையும் பெற்றிருக்கவேண்டும். 
ஆசிரியப் பணியை மனநிறைவோடு ஆற்றவும், வகுப்பறையை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றவும் ஆசிரியர்கள் முன் வர வேண்டும். மாணவர்கள் அறிந்திருப்பதைவிட ஆசிரியர்கள் அதிக அளவில் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அப்போது தான் மாணவர்களின் எதிர்பார்ப்புகளை ஆசிரியர்கள் நிறை வேற்றமுடியும் என்றார்.
விழாவில், முதலாண்டு மாணவர்கள் 295 பேர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தொலை தூரக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) கே. அலமேலு வரவேற்றார். நிறைவாக கல்வியியல் துறைத் தலைவர் பி. சிவகுமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com