அழகப்பா பல்கலை.யில் அக்.1 இல் பட்டமளிப்பு விழா: தமிழக ஆளுநர் பட்டங்களை வழங்குகிறார்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 1) நடைபெறவுள்ள  32-ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.


காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 1) நடைபெறவுள்ள  32-ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இதுகுறித்து அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் நா. ராஜேந்திரன் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கிற்கு  பிற்பகல் 1.15 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகை தருகிறார். விழா தொடங்குவதற்கு முன்னதாக ஆளுநர் புதிய கட்டடங்களை திறந்து வைக்கிறார். 
அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ரூசா 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 100 கோடி நிதியுதவி அனுமதித்தது. அதில் முதல் தவணையாக ரூ. 40 கோடி வழங்கப்பட்டது. 
இதில் கட்டப்பட்டுள்ள சமூக அறிவியல், அழகப்பா நிறுவன கல்வி அறிவியல், தகவல் தொழில்நுட்ப வளாகம், பல்கலைக் கழக அறிவியல் உபகரண மையம், நவீன மகளிர் விடுதி மற்றும் உள் விளையாட்டு அரங்கம்  ஆகிய 6 கட்டடங்களை ஆளுநர் திறந்து வைக்கிறார். மேலும் ரூ.16.50 கோடி மதிப்பிலான சூரியஒளிப் பூங்காவிற்கான (சோலார் பார்க்) அடிக்கல்லையும் நாட்ட உள்ளார்.
இதன் பிறகு பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் தலைமை வகித்து 325 பேருக்கு  பட்டங்கள், பதக்கங்களை நேரடியாக வழங்குகிறார். இவ்விழா மூலமாக இப்பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2,080, இணைப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த 11,020, இணைவுக் கல்வித்திட்டத்தின் கீழ் 1,062, , தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் மூலமாக பயின்ற 12,646 என மொத்தம் 26,808 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட வுள்ளது. இதில் 8,715 பேர் ஆண்கள், 18,093 பேர் பெண்கள் ஆவர். விழாவில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான கே.பி. அன்பழகன் வாழ்த்துரை வழங்குகிறார். 
சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தர் மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி பட்டமளிப்பு உரை நிகழ்த்துகிறார் என்றார்.
அப்போது பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஹா. குருமல்லேஷ்பிரபு, தேர்வாணையர் கே. உதயசூரியன் மற்றும் பேராசிரியர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com