மஹாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பொதுமக்கள் வழிபாடு

மஹாளய அமாவாசையை முன்னிட்டு மானாமதுரை, திருப்புவனம் மற்றும் திருவாடானையில்  பொதுமக்கள் சனிக்கிழமை மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணபூஜை செய்து வழிபட்டனர்.


மஹாளய அமாவாசையை முன்னிட்டு மானாமதுரை, திருப்புவனம் மற்றும் திருவாடானையில்  பொதுமக்கள் சனிக்கிழமை மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணபூஜை செய்து வழிபட்டனர்.
புரட்டாசி மாத மஹாளய அமாவாசையையொட்டி  திருப்புவனம் வைகையாற்றில் தர்ப்பணம் மற்றும் திதி கொடுக்க அதிகாலையிலேயே ஏராளமானோர் கூடினர். இவர்கள் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணபூஜை நடத்தினர். அதன்பின்  இங்குள்ள புஷ்பவனேஸ்வரர் சுவாமி கோயிலுக்குச் சென்று தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரையில் புரட்சியார்பேட்டை பகுதியில் உள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலிலும் ஏராளமானோர் தர்ப்பணபூஜை நடத்தினர். பின்னர் தியாக விநோதப் பெருமாளை தரிசித்தனர். 
இளையான்குடி ஒன்றியம் குறிச்சியிலுள்ள காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் மூலவர் சன்னிதி முன்பு யாகம் வளர்த்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின் ஏராளமானோர் கோயிலுக்கு வந்து காசி விஸ்வநாதர் சன்னிதி முன்பு வரிசையாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் இவர்கள் காசி விஸ்வநாதர் சன்னிதியில் சுவாமிக்கு கங்கைத் தீர்த்தமிட்டு தரிசித்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் தர்ப்பணம் செய்வதற்கான அனைத்து பொருள்களும் இலவசமாக  வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி எஸ்.பி.தேவர் செய்திருந்தார். 
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தீர்தாதண்டதானத்தில் மிகவும் பழைமை வாய்ந்த தீர்தாண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் ராமயாண காலத்தில் ராமர், சீதையை மீட்க, இலங்கை செல்லும் முன் இங்கு வந்து கடலில் புனித நீராடி, இங்குள்ள தீர்த்தக் கிணற்றில் இருந்த நீரை எடுத்து தீர்த்தாண்டீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ததாக புராண வரலாறு கூறுகிறது.  இந்நிலையில் சனிக்கிழமை மஹாளய அமாவாசை முன்னிட்டு சுற்று வட்டாரத்தில் இருந்து பொது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு இங்குள்ள கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்து திதி கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து தீர்த்தாண்டீஸ்வரர் கோயிலில் சுவாமியை வணங்கினர். மேலும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com