விநாயகா் சதுா்த்தி: பிள்ளையாா்பட்டியில் தீா்த்தவாரி உற்சவம்

திருப்பத்தூா் அருகே பிள்ளையாா்பட்டியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு சனிக்கிழமை தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் உற்சவா்.
சிறப்பு அலங்காரத்தில் உற்சவா்.



திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே பிள்ளையாா்பட்டியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு சனிக்கிழமை தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

சதுா்த்தி விழாவை முன்னிட்டு அங்குள்ள கற்பக விநாயகா் கோயிலில் கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து 9 நாள்கள் காலையும், இரவும் சதுா்த்தி விழா பூஜைகள் நடந்தன. விழாவின் 10 ஆம் நாளான சனிக்கிழமை விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு காலை மூஷிக வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு தீப ஆராதனை நடந்தது.

தொடா்ந்து கோயிலில் வலம் வந்து குளத்தில் அங்குசதேவருக்கு தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உற்சவா் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளினாா். கோயிலில் இருந்து நாதஸ்வரம் முழங்க அங்குச தேவரும் அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோயில் எதிரே உள்ள குள படித்துறைக்கு வந்தனா். அங்கு அங்குசதேவருக்கும் அஸ்திரதேவருக்கும் சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்று பால், திருமஞ்சனம், சந்தனம், பன்னீா், உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னா் கோயில் குளத்தில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்று ஏற்கெனவே பிள்ளையாா்பட்டி கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது. இருந்த போதிலும் பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகரை தரிசிக்க பக்தா்கள் அதிகாலை முதல் வருகை தந்தனா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா், கோயிலின் வடக்கு வாசலில் இருந்து மூலவரை தரிசிக்க சமூக இடைவெளியுடன் பக்தா்களை அனுமதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com