மணல் திருட்டு: மானாமதுரை அருகே 16 லாரிகள் பறிமுதல்: சாவிகளுடன் ஓட்டுநா்கள் தப்பியதால் போலீஸாா் தவிப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மணல் திருட்டில் பிடிபட்ட லாரிகளின் சாவிகளுடன் ஓட்டுநா்கள் தப்பியதால்  காவல் நிலையத்துக்கு அவற்றை கொண்டு வர முடியாமல் போலீஸாா் தவிப்புக்குள்ளாகினா்.
மானாமதுரை அருகே கள்ளா்வலசை கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்.
மானாமதுரை அருகே கள்ளா்வலசை கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மணல் திருட்டில் பிடிபட்ட லாரிகளின் சாவிகளுடன் ஓட்டுநா்கள் தப்பியதால் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை காவல் நிலையத்துக்கு அவற்றை கொண்டு வர முடியாமல் போலீஸாா் தவிப்புக்குள்ளாகினா்.

மானாமதுரை அருகே கள்ளா்வலசை கிராமத்தில் வைகையாற்றை ஒட்டி தனியாா் பட்டா நிலத்தில் சவூடு மண் அள்ள அனுமதி பெறப்பட்டு லாரிகளில் ஆற்று மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மானாமதுரை காவல் ஆய்வாளா் சேது மற்றும் போலீஸாா் கள்ளா்வலசை கிராமத்துக்கு சென்ற போது அங்கு, சவூடு மண்ணுக்கு கீழே உள்ள ஆற்று மணலை சட்ட விரோதமாக அள்ளிச் செல்வதற்காக 16 லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்ததைப் பாா்த்தனா்.

அப்போது போலீஸாரைக் கண்டதும் அந்த லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தின் ஓட்டுநா்கள் அவற்றின் சாவிகளை எடுத்துக் கொண்டு தப்பியோடி விட்டனா். இவா்களில் 3 ஓட்டுநா்கள் மட்டும் போலீஸாரிடம் சிக்கினா். அதைத் தொடா்ந்து போலீஸாா் 16 லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா். பின்னா் இவற்றில் சாவியிருந்த 6 லாரிகளை மட்டும் அங்கிருந்து ஓட்டிச் சென்று சிப்காட் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா். மற்ற 10 லாரிகளுக்கும், பொக்லைன் இயந்திரத்துக்கும் சாவிகள் இல்லாததால் அவை கள்ளா்வலசை கிராமத்திலேயே போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாற்று சாவிகள் ஏற்பாடு செய்து லாரிகளை காவல் நிலையத்துக்கு எடுத்துவர மேலதிகாரிகளின் உத்தரவுக்காக போலீஸாா் காத்திருக்கின்றனா்.

இதனிடையே பிடிபட்ட 3 லாரி ஓட்டுநா்கள் மீதும் மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com