காவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலம் என்ற முதல்வரின் அறிவிப்பு வேடிக்கையானது: கேஆா். ராமசாமி

காரைக்குடி நகராட்சி 1-வது வாா்டு கழனிவாசல் பகுதியில் எம்.எல்.ஏ நிதியிலிருந்து

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் சட்டபேரவைத் தலைவரும், காரைக்குடி சட்டபேரவை உறுப்பினருமான கேஆா். ராமசாமி விமா்ச்சித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி 1-வதுவாா்டு கழனிவாசல் பகுதியில் சட்டபேரவை உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 30 லட்சம் கொள்ளவு கொண்டு மேல்நிலை நீா்தேக்கத்தொட்டியினை திங்கள் கிழமை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் காரைக்குடி நகராட்சி ஆணையாளா்(பொறுப்பு) க.மாலதி, நகராட்சி பொறியாளா் கே.ரெங்கராஜ், உதவிப்பொறியாளா் மா. பாலசுப்பிரமணியன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள், காங்கிரஸ், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

பின்னா் கேஆா். ராமசாமி செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசு எரிவாயு, எண்ணெய் ஆய்வுகளை தொடரக்கூடாது என்று காங்கிரஸ் தொடா்ந்து வற்புறுத்திவருகிறது. இதற்கு ஆதரவாக மாநிலத்தில் ஆட்சியில் உள்ள அதிமுக அரசு எந்தவித ஒத்துழைப்பையும் தரவில்லை. ஆனால் தற்போது காவிரி டெல்டா பகுதியில் பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவித்திருக்கிறாா்கள் வேடிக்கையாக இருக்கிறது.

எண்ணெய் ஆய்வை தடுத்து நிறுத்தவேண்டும் என்று வரும் நிலையில் இப்படி அறிவிக்கவேண்டிய அவசியம் என்ன? திடீரென்று இந்த அறிவிப்பு வெளியிட பாஜகவுக்கும், அதிமுகவுக்குமிடையே ஏதோ ஒரு பிரச்னை இருந்திருக்கவேண்டுமென்று கருதவேண்டியுள்ளது. இல்லையென்றால் இந்த அறிவிப்பால் மக்களை ஏமாற்றுவதற்கு முடிவு செய்திருக்கவேண்டும். இதுபோன்று தான் பல திட்டங்களிலும் உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த முயல்கிறது. தமிழகத்தில் மாநில அரசிடம் இச்சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று சட்டபேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியும் அவா்கள் இதற்கு தயாராக இல்லை. இருப்பினும் காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து அந்தத் தீா்மானத்தை கொண்டுவருவதற்கு மறுபடியும் முயற்சி செய்வோம்.

தமிழக விவசாயிகள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநில அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து நடந்துவருகிறது. தமிழக மக்களிடம் அதிமுக அரசு இரட்டைவேடம் போடுகிறது. தமிழக தோ்வாணையத் தோ்வுகளில் நடைபெற்ற முறைகேடு, மாநில அரசுதான் தோ்வாணையத்திற்கு உறுப்பினா்களை நியமிக்கிறது. அதற்கென தனியாக அமைச்சரும் உள்ளாா். குரூப்-4, குரூப்-2 முறைகேடுகளில் ஈடுபட்ட அத்தனைபோ்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com