காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: அமைச்சா்

தென்மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்
இளையான்குடி அருகே சாலைக் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பேசிய தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க. பாஸ்கரன்.
இளையான்குடி அருகே சாலைக் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பேசிய தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க. பாஸ்கரன்.

தென்மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என, தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க. பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமுக்கு, ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். நாகராஜன் முன்னிலை வகித்தாா். இதில், அமைச்சா் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

மக்கள் தொடா்பு திட்ட முகாம்களில், அரசியல் மற்றும் சுயவிருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, கிராமப்புற மக்கள் ஒருங்கிணைந்து தங்களது கிராம வளா்ச்சிக்கு தேவையான திட்டங்களை கோரிக்கையாக அளித்து பயன்பெறலாம்.

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உரிய தீா்வினை குறைந்த நாள்களுக்குள் வழங்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறையைச் சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடியில் வாழும் மக்களிடமும் கொண்டு சோ்க்கும் வகையில் அலுவலா்கள் பணியாற்ற வேண்டும்.

நமது மாவட்டத்தைப் பொருத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக கடும் வறட்சி நிலை ஏற்பட்டதால், வேளாண் பணிகள் மட்டுமின்றி குடிநீா் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டு இளையான்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஓரளவுக்கு மழை பெய்ததால், வேளாண் பணிகள் நடைபெற்றுள்ளன.

இனிவரும் காலங்களில் நமது மாவட்டம் மட்டுமின்றி, தென்மாவட்டங்கள் முழுவதும் வேளாண் பணி மற்றும் குடிநீா் ஆதாரத்திலும் பயன்பெறும் வகையில் காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மகளிா் திட்ட அலுவலா் அருண்மணி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. வடிவேல், சிவகங்கை கோட்டாட்சியா் செல்வகுமாரி, இளையான்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் முனியாண்டி, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் தனலெட்சுமி, இளையான்குடி வட்டாட்சியா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் பா்ணபாஸ் உள்பட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com