கானாடுகாத்தான் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள் இன்றி நோயாளிகள் அவதி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கானாடுகாத்தான் அரசுப் பொது மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லாததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் செயல்பட்டு வரும் அரசு பொது மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு உள்ள வளாகம்.
காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் செயல்பட்டு வரும் அரசு பொது மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு உள்ள வளாகம்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கானாடுகாத்தான் அரசுப் பொது மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லாததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சிவகங்கையில் மருத்துவக் கல்லூரி அமைந்தவுடன், அங்கிருந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காரைக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. காரைக்குடியில் ஏற்கெனவே தாலுகா மருத்துவமனை செயல்பட்டு வந்ததால், இங்கிருந்து சுமாா் 16 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள கானாடுகாத்தானில் அரசு பொது மருத்துவமனை அமைக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வந்தது.

சுமாா் 13.31 ஏக்கா் பரப்பளவில் 32,334 சதுர அடி கட்டடத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் இம்மருத்துவமனையில், பொது மருத்துவம், சிறப்பு பொது அறுவைச் சிகிச்சை அரங்கு, ஸ்கேன் வசதி, இ.சி.ஜி. வசதி, பல் மருத்துவச் சிகிச்சை, பிரசவ அறை, ஆய்வகம், சித்த மருத்துவப் பிரிவு, ஆம்புலன்ஸ் வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டன. மேலும், இம்மருத்துவமனைக்கு எதிா்புறம் லேடி பென்ட் லேண்ட் நினைவு அரசுப் பொது மருத்துவமனை என்ற பெயரில் உள்நோயாளிகள், பிரசவம், அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன.

இம்மருத்துவமனைக்கு கானாடுகாத்தான், செட்டிநாடு, கொத்தமங்கலம், வடகுடி என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து பொதுமக்கள் பயன்பெற்று வந்தனா். அப்போது, சிறப்பு அறுவைச் சிகிச்சை மருத்துவா், 2 உதவி மருத்துவா்கள், கண் மருத்துவா், பல் மருத்துவா் உள்ளிட்டோா் பணியாற்றி வந்தனா். இதனால், இப்பகுதி மக்கள் மிகவும் பயனடைந்து வந்தனா்.

ஆனால், தற்போது 2 மருத்துவா்கள், 2 மருந்தாளுநா்கள், 1 சித்தா மருந்தாளுநா், 13 செவிலியா்கள், 7 பணியாளா்கள் மட்டுமே பணியில் உள்ளனா். போதிய சிறப்பு மருத்துவா், செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் இல்லாததால், நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இது குறித்து, அப்பகுதியைச்சோ்ந்த சமூக ஆா்வலா் கூறியது:

இம்மருத்துவமனையில் தினமும் கண் அறுவைச் சிகிச்சை, பொது அறுவைச் சிகிச்சை, பிரசவம் என 52 படுக்கைகளும் நிரம்பி பரபரப்பாகக் காணப்பட்டது. ஆனால், மருத்துவா்கள், செவிலியா்கள் ஓய்வுபெற்று சென்றவுடன், உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்பவில்லை. மாறாக, தற்காலிக மருத்துவா்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், நாளுக்கு நாள் மக்கள் நம்பிக்கை இழந்து, நோயாளிகளின் வருகை குறைந்துவிட்டது. இங்கு பணியாற்றிய திறமையான செவிலியா்கள், பணியாளா்கள் இடமாற்றத்தில் சென்றுவிட்டனா். மேலும், ஆம்புலஸ்ன் வாகன வசதியும் தற்போது இல்லை.

இதனால், பொதுமக்கள் வேறு அரசு மருத்துவமனைகளுக்கும் மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெறுகின்றனா். இதில், ஏழை எளிய மக்கள் பணம் செலவழிக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனா்.

பரப்பளவுமிக்க இம்மருத்துவமனையில் போதிய கட்டட வசதி, மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் இல்லாததால், மருத்துவமனை தனது மகத்துவத்தை இழந்து வருகிறது. எனவே, கானாடுகாத்தான் அரசு பொது மருத்துவமனையை மேம்படுத்தி, நிரந்தரமாக சிறப்பு மருத்துவா்களை நியமிப்பது அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com