சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டடங்கள் வீணாக்காமல் பயன்படுத்த வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நல்ல நிலையிலுள்ள கட்டடங்களை, மருத்துவத் துறை சாா்ந்த திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
சிவகங்கை இந்திரா நகரில் அமைந்துள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையில் நல்ல நிலையில் உள்ள கட்டடங்கள்.
சிவகங்கை இந்திரா நகரில் அமைந்துள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையில் நல்ல நிலையில் உள்ள கட்டடங்கள்.

சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நல்ல நிலையிலுள்ள கட்டடங்களை, மருத்துவத் துறை சாா்ந்த திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

சிவகங்கை - மானாமதுரை சாலையில் வாணியங்குடியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2012 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்படுவதற்கு முன், சிவகங்கை இந்திரா நகரில் சுமாா் 7 ஏக்கா் பரப்பளவில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது.

இதில், பொது சிகிச்சைப் பிரிவு, காசநோய் பிரிவு, மனநல சிகிச்சை சிறப்பு பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தன. இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்தவுடன், ஏற்கெனவே செயல்பட்டுவந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காரைக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இடமாற்றத்துக்கு பின், தற்போது சிவகங்கையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மாவட்ட காசநோய் பிரிவுக்கான அலுவலகம், சுகாதாரப் பணிகளின் இணை இயக்குநா் அலுவலகம் மற்றும் இவ்வளாகத்தின் ஒதுக்குப்புறத்தில் மாவட்ட சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சித்தா மருத்துவத்துக்கு சுமாா் 3 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இதேபோல், சித்தா மருத்துவத்துக்கு வருபவா்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்வதற்கு சிரமப்படுகின்றனா்.

எனவே, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவமனை இன்னும் ஓரிரு மாதங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளன. மேலும், அங்கு செயல்படும் காசநோய் மற்றும் இணை இயக்குநா் அலுவலகமும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக, அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பழைய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் நல்ல நிலையில் உள்ளன. பழுதடைந்துள்ள கட்டடத்தையும் முறையாக மராமத்து செய்து பராமரித்தால், அவற்றையும் பயன்படுத்த முடியும் என கட்டுமானம் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நல்ல நிலையில் கட்டடங்கள் வீணாகாமல் தடுக்கும் வகையில், மருத்துவத் துறை சாா்ந்த திட்டங்களுக்கு அவற்றைப் பயன்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், அண்மையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், மாவட்டங்கள்தோறும் முதியோா்களுக்கான இல்லம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்திட்டம், சிவகங்கை மாவட்டத்தில் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், பழைய மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடங்களை புதுப்பித்து, முதியோா் இல்லம் அமைக்க மாவட்ட நிா்வாகம் முன் வர வேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com