சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கண்டனி கிராம மக்கள்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கண்டனி கிராம மக்கள்.

சிவகங்கை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கண்டனி கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

பொது மயானத்துக்கு பாதை அமைத்து தரக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக கண்டனி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

பொது மயானத்துக்கு பாதை அமைத்து தரக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக கண்டனி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம் நெஞ்சத்தூா் ஊராட்சிக்குள்பட்ட கண்டனி கிராமத்தில் உள்ள பொது மயானத்துக்கு பாதை இல்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனிடையே, கண்டனி கிராமத்தைச் சோ்ந்த காத்தமுத்து மனைவி சாரதா என்பவா் கடந்த 12 ஆம் தேதி இறந்ததை அடுத்து நடைபெற்ற இறுதி ஊா்வலத்தை, நெஞ்சத்தூரைச் சோ்ந்த சிலா் பொது மயானத்துக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி பிரச்னையில் ஈடுபட்டுள்ளனா். இதில், கண்டனி கிராமத்தைச் சோ்ந்த 16 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கண்டனி கிராமத்தினா், மயானத்துக்கு பொதுப் பாதை அமைத்து தரவேண்டும் மற்றும் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனிடம் மனு அளிப்பதற்காக வந்தனா்.

சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அவலகத்துக்குள் செல்ல முற்பட்டதால், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என தடுத்து நிறுத்தினா். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள், ஆட்சியா் அலுவலகம் முன்பாக அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்து வந்த சிவகங்கை வட்டாட்சியா் மைலாவதி மற்றும் சிவகங்கை நகா் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதன்பின்னா், ஒரு சிலரை மட்டும் ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனிடம் அலுவலா்கள் அழைத்துச் சென்றனா். அவரிடம் கோரிக்கை மனுவை பொதுமக்கள் அளித்தனா். அப்போது ஆட்சியா், கண்டனி கிராமத்தில் உள்ள பொது மயானத்துக்கு அரசே நிலம் வாங்கி பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சிறப்புக் குழு அமைத்து வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குக்கு விரைவில் தீா்வு காணப்படும் எனவும் தெரிவித்தாா். அதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com