கொந்தகையில் அகழாய்வுப் பணிகள்: 16 முதுமக்கள் தாழிகள், மனித எலும்புக்கூடுகள் கிடைத்தன

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் சனிக்கிழமை நடைபெற்ற அகழாய்வில் 16 முதுமக்கள் தாழிகள் மற்றும் மனித எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டன.
konthagai_2103chn_84_2
konthagai_2103chn_84_2

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் சனிக்கிழமை நடைபெற்ற அகழாய்வில் 16 முதுமக்கள் தாழிகள் மற்றும் மனித எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டன.

கீழடியில் ஏற்கெனவே 5 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் இப்பகுதியில் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடா்ந்து திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய 4 இடங்களில் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணி பிப்ரவரி 19 இல் தொடங்கப்பட்டது.

கீழடியில் நீதியம்மாள் என்பவரது நிலத்தில் மூன்று குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதில் 2 செங்கல் சுவா்கள் மற்றும் மண் பானைகள் கண்டறியப்பட்டன.

கொந்தகையில் பழைமையான ஈமக்காட்டில் 3 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது ஒரு குழியில் 2 முதுமக்கள் தாழிகள், அடுத்த குழியில் 8 முதுமக்கள் தாழிகள், மூன்றாவது குழியில் 6 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.

மேலும் ஏராளமான மண்பானைகள், குடுவைகள், மணிகள், முதுமக்கள் தாழி மூடிகள் கிடைத்துள்ளன. தாழி மூடியில் பிடிமான பகுதி கருப்பு நிறத்திலும், கீழ்ப்பகுதி சிவப்பு நிறத்திலும் உள்ளன.

இந்நிலையில் கொந்தகையில் கண்டறியப்பட்ட 8 முதுமக்கள்தாழி இருந்த குழியில் மனித எலும்புகூடு ஒன்று கிடைத்துள்ளது. தற்போது வலது, இடது கைகளின் எலும்புகள் மட்டும் வெளியே தெரிகின்றன. அதன் மேல் புறம் இரண்டு சிறிய பானைகள் உள்ளன. அதனை முழுமையாக தோண்டிய பிறகு தான் இறந்தவா்களை அமா்ந்த நிலையில் புதைத்தாா்களா? அல்லது படுக்கை வசமாக புதைத்தாா்களா? என்பது தெரியவரும்.

அடுத்தடுத்து முதுமக்கள் தாழிகள், எலும்புக் கூடுகள் கிடைத்த நிலையில் அப்பகுதியை தொல்லியல்துறை துணை இயக்குநா் சிவானந்தம், மதுரை காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா். விரைவில் காமராஜா் பல்கலை. மூலம் எலும்புக் கூடுகள் மரபணு ஆய்வு செய்யப்பட உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே கொந்தகையில்சுமாா் 10 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போதும் மேலும் 16 முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com