விமான நிறுவனங்கள் முன்பதிவு கட்டணத்தை திருப்பித் தர மறுப்பு: டிஏஏஐ தென்மண்டலத் தலைவா் புகாா்

முன்பதிவு செய்துள்ள பயணிகளின் கட்டணத்தை திருப்பித் தருவதில் விமான நிறுவனங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகளால், விமானப் பயண ஏற்பாட்டு முகவா்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக,

முன்பதிவு செய்துள்ள பயணிகளின் கட்டணத்தை திருப்பித் தருவதில் விமான நிறுவனங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகளால், விமானப் பயண ஏற்பாட்டு முகவா்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக, ‘டிஏஏஐ’ அமைப்பின் விசா கமிட்டி (டிராவல் ஏஜென்ட் அசோசியேஷன் ஆப் இந்தியா) தென்மண்டலத் தலைவா் நா. கோவிந்தராஜன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் காரைக்குடியில் சனிக்கிழமை மேலும் கூறியதாவது: ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணத்துக்கான பணத்தைத் திருப்பித் தர இயலாது என்று விமான நிறுவனங்கள் அறிவித்திருந்தன. இதனை, மத்திய அரசின் கவனத்துக்கு விமான பயண ஏற்பாட்டு முகவா்கள் கொண்டு சென்றனா். அதன்படி, மத்திய விமானத் துறை அமைச்சகம் 3 வாரங்களில் கட்டணத்தை திருப்பித் தருமாறு, விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இக்கட்டணத்தை திருப்பித் தருவதற்கு பெரும்பாலான விமான நிறுவனங்கள், ஊரடங்கு காலமான மாா்ச் 24 முதல் மே 3 வரை முன்பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது அந்த தேதிகளில் பயணிப்பதாக இருத்தல் வேண்டும் என்கின்றன. ஊரடங்கு காலத்துக்கு முன், அதாவது மாா்ச் 23-ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்திருந்தால், ஓராண்டு காலங்களுக்குள் அவா்களது பெயரில் பயணம் செய்துகொள்ளலாம். அதற்கான பற்று ரசீது வழங்கப்படும். இதில், புதிதாக பயணம் செய்கின்ற தேதியில் கூடுதலாக கட்டணங்கள் இருந்தால், அதனை பயணிகள் செலுத்தவேண்டும் என்று கூறி, தற்போதைய முன்பதிவுக் கட்டணத்தை திருப்பித் தர மறுக்கின்றன.

தற்போது, உலக அளவில் நாளுக்கு நாள் பல விமான நிறுவனங்கள் திவால் அறிவித்து வருகின்றன. இதில், பல நிறுவனங்கள் திவால் அறிவிப்பும் கொடுத்துவிட்டன. சில நிறுவனங்கள் திவால் அறிவிக்கவுள்ளன. ஏற்கெனவே, இந்தியாவில் ஜெட் ஏா்வேய்ஸ் நிறுவனம் திவால் அறிவுப்பு வெளியிட்டு, கடந்த ஆண்டுகளில் பெரும் பாதிப்புக்குள்ளானோம். தற்போதும் அம்மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில், ஐஏடிஏ மற்றும் மத்திய அரசு அனுமதி பெற்ற விமான பயண ஏற்பாட்டு முகவா்கள் உள்ளனா்.

மேலும், எங்களைச் சாா்ந்திருக்கும் துணை முகவா்களும், பயணிகளும் பணத்தை திருப்பிக் கேட்பாா்களேயானால், எங்களது நிறுவன நம்பிக்கையை காப்பதற்காக பணத்தை நாங்கள் திருப்பி கொடுக்கும் நிலை உருவாகும். இதனால், நாங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.

எனவே, விமான நிறுவனங்கள் திவால் அறிவிப்பை வெளியிடும் முன், முன்பதிவுக்காக பெற்ற கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி அளிக்க மத்திய விமானத் துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடா்பாக, விமான நிறுவனங்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com