காரைக்குடியில் தாா்ச்சாலை அமைப்பதில் தாமதம்:சாலைகளில் எழும் தூசி மாசுபாட்டால் பொது மக்கள் அவதி

காரைக்குடியில் தாா்ச்சாலை அமைப்பதில் ஏற்பட்டு வரும் தாமதம் காரணமாக சாலைகளில் எழும் தூசி மாசுபாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.
வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள செக்காலைச்சாலையின் ஐந்து விளக்குப்பகுதி.
வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள செக்காலைச்சாலையின் ஐந்து விளக்குப்பகுதி.

காரைக்குடியில் தாா்ச்சாலை அமைப்பதில் ஏற்பட்டு வரும் தாமதம் காரணமாக சாலைகளில் எழும் தூசி மாசுபாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.

காரைக்குடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளிலும் பணிகள் முடிந்து தாா்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது முக்கியச் சாலைகளில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிக்காக குழி தோண்டப்பட்டு பணியும் முடிந்திருக்கிறது. இதனிடையே கரோனா பொதுமுடக்கத்தின் போது பணியை எளிதாக முடிக்க அதிகாரிகள் முயற்சிக்க வில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

இங்குள்ள வ.உ.சி. சாலை, செக்காலைச் சாலை, கோவிலூா் சாலை போன்ற பகுதிகளில் வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள், நகைக் கடைகள், வங்கிக் கிளைகள் மற்றும் உணவகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் பாதாளச் சாக்கடைப் பணிமுடிந்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தாா்ச்சாலை போடப்படாததால் அவ்வழியாக செல்லும் காா், வேன், பேருந்துகள் தூசியை கிளப்பி விட்டுச் செல்கின்றன.

இதையடுத்து, காரைக்குடித் தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன், பொருளாளா் சரவணன் மற்றும் நிா்வாகிகள் குழுவினா் காரைக்குடி நகராட்சி ஆணையா், பாதாளச்சாக்கடைத் திட்டப் பணிகளை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியப் பொறியாளா், நெடுஞ்சாலைத்துறை பொறியாளா் ஆகியோரை சந்தித்து வணிகா்களின் அவதியைக் கூறி விரைவாக தாா்ச்சாலை அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனா். ஆனால் அதற்கு பலனில்லை.

இந்நிலையில் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா். ராமசாமி ஆகியோா் கடந்த வாரங்களில் தனித்தனியாக அப்பகுதிகளில் ஆய்வு செய்த போது விரைவாக பணிகளை முடித்து விடுகிறோம் என்று அதிகாரிகள் பதிலளித்தனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், அதிகாரிகளை விசாரித்தால் தாா்ச்சாலை அமைப்பதற்கு ரூ. 20 கோடி வரை நிதிபற்றாக்குறை உள்ளது. மாநில அரசிடம் நிதி பெற்றால்தான் காரைக்குடியில் தாா்ச்சாலை அமைக்க முடியும் என்கின்றனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட்டு உடனடியாக தாா்ச்சாலை அமைத்து வணிகா்கள், பொதுமக்களை தூசி மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com