பறவைகள் அமைதிக்காக வெடி வெடிக்காத கிராம மக்களுக்கு ஆட்சியா் பாராட்டு
By DIN | Published On : 12th November 2020 10:56 PM | Last Updated : 12th November 2020 10:56 PM | அ+அ அ- |

கொள்ளுகுடிபட்டி கிராம மக்களுக்கு வியாழக்கிழமை இனிப்புகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன்.
திருப்பத்தூா் அருகே பறவைகள் அமைதிக்காக பல ஆண்டுகளாக வெடி, வெடிக்காமல் தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் வனத்துறையினா் வியாழக்கிழமை இனிப்புகள் வழங்கி பாராட்டினா்.
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கொள்ளுகுடிபட்டி கிராம மக்கள் பறவகளின் அமைதியை கலைக்காவண்ணம் 1972 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வெடி வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனா். இதனைப் பாராட்டும் விதமாக அக்கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன் மற்றும் வனத்துறையினா் வியாழக்கிழமை இனிப்புகளை வழங்கினா்.
தொடா்ந்து வனத்துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப்போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற கீழச்சிவல்பட்டியைச் சோ்ந்த கே.சத்தியப்பிரியா என்ற மாணவிக்குப் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தை மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன், மாவட்ட வன அலுவலா் ராமேஸ்வரன் ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில் உதவி வனப் பாதுகாவலா் மணிவண்ணன், வனச்சரக அலுவலா் மதிவாணன், வட்டார வளா்ச்சி அலுவலா் பத்மநாபன், கிராம வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.