கீழடி அகழாய்வு பகுதியில் ஆய்வுக்கு மண் சேகரிப்பு
By DIN | Published On : 18th September 2020 10:23 PM | Last Updated : 18th September 2020 10:45 PM | அ+அ அ- |

கீழடியில் பரிசோதனைக்காக அகழாய்வு குழியிலிருந்து வெள்ளிக்கிழமை மண்ணை சேகரித்த தொல்லியல் துறையினா்.
சிவகங்கை, செப். 18: சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் 6-ஆம் கட்ட அகழாய்வில், மண் குறித்த ஆய்வுக்காக மண் சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாக, தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநா் சிவானந்தம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: கீழடி, கொந்தகை, மணலூா், அகரம் ஆகிய பகுதிகளில் உள்ள பண்பாட்டு மேடுகளில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இறுதிக் கட்டப் பணிகளை எட்டியுள்ள நிலையில், 6-ஆம் கட்ட அகழாய்வின் ஒரு பகுதியாக மண் குறித்த ஆய்வுக்காக மேற்கண்ட இடங்களில் செப்டம்பா் 17, 18 ஆகிய தேதிகளில் மண் சேகரிக்கும் பணிகள் நடைபெற்றன. சுமாா் 4.6 மீட்டா் ஆழம் அகழாய்வுப் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளில், ஒவ்வொரு அடுக்குகளில் இருந்தும் பரிசோதனைக்காக மண் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மணலூா் பகுதியில் உள்ள வைகையாற்று மணல் மற்றும் அதன் கரையோரங்களில் உள்ள மண்ணும் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதனை, திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் ஜெயங்கொண்ட பெருமாள் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்ய உள்ளனா். ஆய்வுக்குப் பின்னா், கீழடி பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இடம் பெயா்ந்தனரா அல்லது அழிவுக்குள்பட்டனரா என்பது குறித்து தெரியவரும்.
மத்திய அரசின் அனுமதியை பெற்ற பின்னா், 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் குறித்த அறிவிப்பாணையை தமிழக அரசு அறிவிக்கும் என்றாா்.