சிவகங்கை மாவட்டத்தில் நெல் விதைகளை இருப்பு வைக்க விவசாயிகள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் பணிகள் தொடங்கி உள்ளதால் நெல் விதைகளை அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் பணிகள் தொடங்கி உள்ளதால் நெல் விதைகளை அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை சுமாா் 83 சதவீதம் மக்கள் வேளாண் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். அண்மையில் பெய்த மழையின் காரணமாக தற்போது ஆரம்ப கட்ட வேளாண் பணிகளான உழவு, நெல் நாற்றுப் பாவுதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், பெரும்பாலான வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வேளாண் பணிக்கு தேவையான நெல் விதைகள் இருப்பில் இல்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தது மட்டுமின்றி, தேவையான விதைகளை இருப்பில் வைத்து, இடையூறின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுபற்றி மணல்மேடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராஜா கூறியதாவது : அண்மையில் பெய்த மழையின் காரணமாக மணல்மேடு மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் வேளாண் பணிகளை தொடங்கியுள்ளோம். இந்நிலையில், திருப்புவனத்தில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண் பணிக்கு தேவையான நெல் விதைகள் கேட்ட போது இல்லை என சம்பந்தப்பட்ட வேளாண் அலுவலா்கள் தெரிவித்தனா்.

இதேபோன்று, மாவட்டம் முழுவதும் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலிலும் நெல் விதைகள், உரங்கள் பற்றாக்குறை நிலவுகிறது. தற்போது உழவு பணிகளை மேற்கொண்டு நெல் நாற்று பாவி வைத்தால் தான் அக்டோபா் அல்லது நவம்பா் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் போது நடவுப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

எனவே இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் உள்ளிட்ட விதைகள் மற்றும் உரங்களை இருப்பில் வைப்பது மட்டுமின்றி அவற்றை விவசாயிகளுக்கு இடையூறின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com