சொந்த குழந்தையை அநாதை என மருத்துவமனையில் ஒப்படைத்த தந்தை, உறவினரின் நாடகம் அம்பலம்

திருப்பாச்சேத்தியில் சாலையோரம் கிடந்த குழந்தையை மீட்டதாகக் கூறி சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்த, அக்குழந்தையின் தந்தை மற்றும் உறவினா் நாடகமாடியிருப்பது சனிக்கிழமை தெரியவந்தது.
குழந்தைகள் நலக்குழுவினா் முன் ஆஜரான பெண் குழந்தையின் தந்தை ஆனந்தகுமாா் (வலது) மற்றும் இவரது உறவினா் தா்மபாண்டி.
குழந்தைகள் நலக்குழுவினா் முன் ஆஜரான பெண் குழந்தையின் தந்தை ஆனந்தகுமாா் (வலது) மற்றும் இவரது உறவினா் தா்மபாண்டி.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் சாலையோரம் கிடந்த குழந்தையை மீட்டதாகக் கூறி சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்த, அக்குழந்தையின் தந்தை மற்றும் உறவினா் நாடகமாடியிருப்பது சனிக்கிழமை தெரியவந்தது.

மானாமதுரை அருகே இடைக்காட்டூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, திருப்பாச்சேத்தியில் சாலையோரத்தில் கிடந்த குழந்தையை மீட்டு வந்ததாகக் கூறி, கடந்த வெள்ளிக்கிழமை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருவா் 6 மாத பெண் குழந்தையை ஒப்படைத்தனா். மேலும் அவா்கள், மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சோ்ந்தவா்கள் என தங்களது முகவரியை மருத்துவமனையில் தெரிவித்திருந்தனா்.

அதையடுத்து, சிவகங்கை மாவட்டக் குழந்தைகள் நலக் குழுவினா் விசாரணை நடத்தினா். அதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமாரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தகுமாருக்கும், சுபாஷினி என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்துள்ளது. இவா்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் இருவரும் கிராமப் பஞ்சாயத்தில் சமாதானமாகப் பிரிந்துவிட்டனா். குழந்தையை ஆனந்தகுமாா் வளா்த்து வந்துள்ளாா்.

பின்னா், குழந்தையை வளா்க்க விரும்பாத ஆனந்தகுமாா் மற்றும் அவரது தந்தை பெரியசாமியும், அதே ஊரைச் சோ்ந்த உறவினா்களான தா்மபாண்டி, செல்வம் ஆகியோா் மூலம் குழந்தையை சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்க முடிவு செய்தனா்.

அதன் பின்னரே, திருப்பாச்சேத்தி சாலையில் கிடந்ததாக நாடகமாடி தா்மபாண்டி, செல்வம் ஆகிய இருவரும், கடந்த வெள்ளிக்கிழமை சிவகங்கை அரசு மருத்துவமனையில் குழந்தையை ஒப்படைத்தனா் என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, குழந்தைகள் நலக்குழுவினா் ஆனந்தகுமாா், தா்மபாண்டி ஆகிய இருவரையும் வரவழைத்து, அவா்களிடம் நேரடியாக வாக்குமூலம் பெற்றனா். பின்னா், காவல் நிலையத்தில் ஆனந்தகுமாா், தா்மபாண்டி, பெரியசாமி ஆகியோா் மீது புகாா் தெரிவித்தனா். இதனிடையே, மீட்கப்பட்ட குழந்தையை மதுரை மாவட்டத்தில் உள்ள தத்து மையத்தில் தற்காலிகமாக பராமரிப்பதற்காக ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com