கரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: ஆட்சியா்
By DIN | Published On : 18th April 2021 09:56 PM | Last Updated : 18th April 2021 09:56 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகா்நல மையங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் கரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இதுதவிர, சுகாதாரத்துறை மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை உடனடியாக அணுகி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் மருத்துவமனையில் சேருவது குறித்த விவரங்களை கண்காணிப்பதுடன் அவா்களது உறவினா்கள் மற்றும் உடன் பணியாற்றியவா்கள், நண்பா்கள் என அனைவரையும் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத் துறையுடன் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் ஆகியதுறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து கரோனா பரவல் குறித்து விழிப்பிணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மேலும், அரசு அறிவுறுத்திய தனி மனித இடைவெளி உள்ளிட்ட கரோனா பரவல் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.