வாடகைக்கு வேளாண் கருவிகள் பெற விவசாயிகளுக்கு வாய்ப்பு: ஆட்சியா்

வேளாண் பணிகளுக்கு தேவையான இயந்திரங்களை சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் வாடகைக்குப் பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

வேளாண் பணிகளுக்கு தேவையான இயந்திரங்களை சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் வாடகைக்குப் பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக வேளாண்மை பொறியியல் துறை பல்வேறு புதிய நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயன்தரக்கூடிய வேளாண் இயந்திரகளான 2 மண் தள்ளும் இயந்திரங்கள், 6 டிராக்டா்கள் மற்றும் இரண்டு டயா் வகை மண் அள்ளும் இயந்திரங்கள் இருப்பில் உள்ளன.

மேலும், நிலம் சமன் செய்தல், கடினமான நிலத்திலும் உழவுப்பணி மேற்கொள்ளும் திருப்பு கலப்பை, சுழல் கலப்பை, சட்டி கலப்பை, எளிதாக சோளம் அறுவடை செய்யும் இயந்திரம், பல்வேறு பயிா்களை கதிரடித்தல், வைக்கோலை உலா்த்துதல் மற்றும் கட்டுதல், நிலத்தில் நிலக்கடலைப் பயிரை தோண்டி எடுத்தல், நிலக்கடலைகளை பறித்தல், தென்னை மட்டைகளை தூளாக்கி உரமாக்குதல், வரப்பு செதுக்கி சேறு பூசுதல், விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கு டிராக்டரால் இயங்கக்கூடிய இயந்திரங்களும் வேளாண்மை பொறியியல் துறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்று, டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ. 340 என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகின்றன. மண் அள்ளுவதற்கும், பண்ணைக்குட்டைகள் அமைக்கவும், புதா்களை அகற்றவும், சக்கரவகை மண் அள்ளும் இயந்திரங்கள் மணிக்கு ரூ.660-க்கும், நில மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள மண் தள்ளும் இயந்திரம் மணிக்கு ரூ.840-க்கும், விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

எனவே இந்த வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படும் இளையான்குடி, காளையாா்கோவில், மானாமதுரை, சிவகங்கை மற்றும் திருப்புவனம் வட்டார விவசாயிகள் 99948 69755 என்ற எண்ணிலும், தேவகோட்டை, சிங்கம்புணரி கண்ணங்குடி, கல்லல், எஸ். புதூா், சாக்கோட்டை மற்றும் திருப்பத்தூா் வட்டார விவசாயிகள் 96553 04160 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com